நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Wednesday, March 28, 2012

குழந்தை வளர்ப்பு:சுயமதிப்புமிக்க குழந்தைகளாக வளர...


வளர்மதியின் தந்தை அவளது அரையாண்டுத் தேர்வின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டைப் பார்த்து அதிர்ந்து போனார். அவளிடம் கோபப்படாமல் கரிசனத்தோடு கேட்டார்; நல்லாத்தானே படிச்சே, மதி; ஏன் இப்படி மார்க் குறைந்ஞ்சு போச்சு? தரையைப் பார்த்துக் கொண்டிருந்த மகள், நிமிர்ந்து பார்க்காவிட்டாலும் அவள் அழ ஆரம்பிக்கிறாள் என்று அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.

மதி புத்திசாலி, நன்கு தயார் செய்திருந்தாள்; ஏன் மதிப்பெண் குறைந்தது? காரணத்தை அறிய அவரும் பல கேள்விகளைத் தொடுத்தார். ம்ஹூம்.. எந்தப் பதிலும் வரவில்லை. குனிந்த தலைநிமிராமல் பொல பொலவென்று கண்ணீர் விட்டுக் கொண்டு நிற்கும் மகளைப் பார்க்க அவருக்குக் கோபம் வர ஆரம்பித்தது.

கத்த ஆரம்பித்த அவரை, அமைதிப்படுத்த வளர்மதியின் தாய் குறுக்கிட வேண்டியிருந்தது. மகளை அப்புறப்படுத்தியபின் தாய், தந்தையிடம் சொன்னார். அவளே மார்க் குறைஞ்சிருக்கேன்னு வருத்தத்திலே இருக்கறப்போ, நீங்க வேறே கத்தி அவளை வருத்தப்பட வைக்கணுமா? சும்மா இரு, பிரச்னை எங்கேன்னு புரிய வேண்டாமா? போன தடவை 90 மார்க் இந்தத் தடவை 40 மார்க்... நீ அவளைப் பயந்தாங்கொள்ளி ஆக்கிட்டே சின்ன வயசிலே ஏதோ ஒண்ணு மாத்தி ஒண்ணு உடம்பு படுத்திக்கிட்டே இருந்ததாலே அவளை நீ ரொம்பப் பொத்திப் பொத்தி வளர்த்துட்டேன்னு தோணுது.... என்று அவர் பதில் சொல்ல, அவர்களுடைய விவாதம் தொடர்ந்து எங்கெங்கோ போக ஆரம்பித்தது.

வளர்மதிக்கு வயது 15 இப்போது ஏன் இந்த நிலைமை? எங்கே எது தவறாகிவிட்டது? காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்று பார்ப்போம்.

ஒவ்வொரு குழந்தையும் வளரும்போது தன்னைப் பற்றி ஒரு மதிப்பீட்டைத் தனக்குள் உருவாக்கிக் கொள்கிறாள். இதைத்தான் சுயமதிப்பு என்று சொல்கிறோம். சுயமதிப்பு சரியாக இருக்கும் குழந்தை தன்னம்பிக்கையுடன் செயல்படுவாள். அவசியம் இல்லாதவற்றுக்குப் பயப்படமாட்டாள்.

சுயமதிப்பு எப்படி உருவாகிறது?

குழந்தையின் முதல் வயதிலிருந்தே சுயமதிப்பு உருவாக ஆரம்பிக்கிறது என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதா? ஒரு குழந்தை தனக்குக் கிடைக்கும் பாராட்டுகள்; தான் அடையும் வெற்றிகள் இவற்றைப் பொருத்து, தன்னைப் பற்றிய கருத்துகளை உருவாக்கிக் கொள்கிறது. சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட முதல் முறை நடப்பது, நடக்க ஆரம்பிப்பது, போன்றவை குழந்தைக்கு வெற்றிதான். பெற்றவர்கள் பாராட்டும் பொழுது, நான் கெட்டிக்காரி என்கிற பெருமையை நாம் அவள் முகத்தில் காண்போம்! என்னால் முடியும், எனக்கு வரும் போன்ற எண்ணங்கள் வரவர, தன்னம்பிக்கை கூடும்.

வளர்மதியின் விஷயத்தில் பெற்றோர் சற்றே எச்சரிக்கையோடு நடப்பதாக எண்ணி, அவளது இளம்பிராயத்தில் தேவைக்கு மீறிய பாதுகாப்பை அளித்திருக்கலாம்.

குழந்தை வேகமாக ஓடினால் அதைப் பாராட்டுவதற்குப் பதில் ஓடாதே, விழுந்து விடுவாய் என்கிற விதத்தில் கொடுக்கும் பாதுகாப்பை இங்கு குறிப்பிடுகிறேன். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளிடம் உன்னால் முடியாது; நான் செய்து கொடுக்கிறேன், நீ ரொம்ப நேரம் ஆக்குவாய், நான் கிடுகிடு என்று முடித்து விடுவேன் என்று குழந்தைகளிடம் எதிர்மறையாகப் பேசுவதை நாம் பார்க்கிறோம். குழந்தைகள் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு. எனக்கு வராது என்று பெற்றோர் சொல்கிறார்கள் என்கிற சுதியில் குழந்தை முயற்சி செய்கையில் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.

வளர்மதிக்கு ஒருவேளை இளம் பிராயத்திலேயே எனக்கு வராது என்னால் முடியாது என்று என் பெற்றோர் நினைக்கிறார்கள் என்று தோன்ற ஆரம்பித்திருந்தால் அவளிடம் எதிலும் ஒரு தயக்கம் வந்திருக்கலாம். அதுவே அவள் வளர்ச்சிக்குத் தடையாகிவிடும். ஒவ்வொரு சிறு தோல்வியும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி ஒரு பயத்தை வரவழைத்திருக்கலாம். அவளே தனது மனநிலையைப் புரிந்து கொள்ளாதபோது, பெற்றோரிடம் எப்படித் தெரிவிப்பாள்? புரிந்து கொள்ளாத தந்தை அவளிடம் சத்தம் போட, அவள் இன்னும் மோசமாவாள்! அவளுக்குத் தேவை பெற்றோர் அவளுக்கு கொடுக்கும் உற்சாகமும், ஊக்குமும்தான்!

சில பெற்றோர் இப்படிக் குழந்தைகளை மேலும் இறக்கிவிடும் விதத்தில், அவளைப் பார்; இவளைப் பார் என்று பிறருடன் ஒப்பிட்டுப் பேசுவது குழந்தைகளுக்கு எவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் என்று புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

குழந்தைகள் எப்போதுமே பெற்றோரின் ஒப்புதலை பாராட்டை எதிர்பார்ப்பார்கள். மிகச் சிறிய விஷயங்களில் கூட வளர்ந்து சுதந்தரமாகச் செயல்படும் வரை பெற்றோர் அவர்கள் வாழ்வில் ஒரு முக்கிய பங்களிப்பைச் செய்வார்கள். இதை பெற்றோர் மறக்கக்கூடாது.

பாதிக்கப்பட்ட சுயமதிப்புடன் வளரும் குழந்தைகள் வளர்ந்தபின் எப்படி நடந்து கொள்வார்கள் என்று அறிந்தால், சிறு வயது அனுபவங்கள் குழந்தைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்று புரியும்.

* எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படமாட்டார்கள். பாதியில் பின்வாங்கிவிடுவார்கள்.

* பிறருடைய அறிவுரையை அவர்கள் தம்மைக் குற்றம் சொல்வதாகக் கொள்வார்கள்.

* வேறு யாரையாவது ஒருவர் பாராட்டினால் இவர்களுக்கு அறவே பிடிக்காது. என்ன, பெரிதாகச் சாதித்துவிட்டாள்? என்று குறையாக மதிப்பிடுவார்கள்.

* தன்னை எல்லோரும் பாராட்ட வேண்டும்; தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இல்லாவிட்டால் கோபம் வந்துவிடும்.

* நாலு பேருக்கு நடுவில் தன் கருத்தைச் சொல்ல தயங்குவார்கள். மற்றவர் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்கிற தயக்கம் வரும்.

* தன் தோல்விகளுக்குப் பிறரைக் காரணம் காட்டுவார்கள். வெற்றி கிடைத்தால் பெருமையாகப் பேசுவார்கள்.

வளர்மதியின் பெற்றோர் இப்படியே அவளை விட்டுவிட்டால் இந்த நிலைமைக்கு அவள் ஆளாகலாம். அவளை உற்சாகப்படுத்த அவர்கள் என்ன செய்ய வேண்டும்.

* குறைகூறுவதை அறவே நிறுத்த வேண்டும்.

* அவளிடம் உள்ள நல்ல திறமைகளை வளர்க்க வேண்டும்.

* சின்ன செயலானாலும் பாராட்ட வேண்டும். தவறு செய்திருந்தால் கூட அதையே மட்டம் தட்டிப் பேசாமல், இனி அந்தத் தவறு நடக்காதிருக்க என்ன செய்யலாம் என்று பேச வேண்டும்.

* உனக்குத் தன்னம்பிக்கை இல்லை சுயமதிப்பு குறைவு என்று நேரிடையாகப் போட்டு உடைக்ககக்கூடாது.

* மார்க் முக்கியமில்லை. உன் முயற்சிதான் முக்கியம். என்ன மார்க் வாங்கினாலும் எங்கள் மகள் எங்களுக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று அவளை நம்ப வைக்க வேண்டும். பெற்றோர்கள் கவனமாகச் செயல்பட வேண்டியது அவசியம்.


-தமிழ்ச் சமுதாயம்

1 கருத்துரைகள்:

  1. உங்கள் குழந்தை கொடுத்து வைத்த குழந்தை

    ReplyDelete