நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Friday, May 11, 2012

தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள் பகுதி - I



இலக்கியம் காலத்திற்கு ஏற்பத் தன் பாடுபொருளையும், பரிணாமத்தையும் விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. நாம் வாழும் உலகம் அறிவியல் உலகமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய இலக்கியமும் அறிவியலைப் படைப்பிலக்கியத்தில் பயன்படுத்தி வந்திருகிறது. நம் முன்னோர்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்தே அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். மழையின் வருகையைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும், விலங்கினங்களின் தன்மைகள் பற்றியும், அணுக்கள் பற்றியும் தம்முடைய படைப்புகளில் பழந்தமிழர் வெளியிட்டுள்ளனர்.

மழையின் வருகை:

கடல் நீரானது ஆவியாகி மேலெழுந்து பின் குளிர்ந்த காற்றால் மீண்டும் மழையாக வருகின்றது. இதனைக் கதைவடிவில் முல்லைப்பாட்டில் சொல்லியுள்ளனர், "திருமால் வாமன வடிவம் எடுத்து உலகளந்தது போன்ற கரிய மேகம் கடல் நீரை முகந்து கொண்டு மேலெழுந்து மழை பெய்கிறது". இதனை,

”நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
நீர் செல நிமிர்ந்த மால் போல”

என்று முல்லைப்பாட்டில் நப்பூதனார் அவர்கள் மழை தோன்றுவதற்கான அறிவியற் காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தாவரங்களுக்கும் உயிருண்டு:

இங்கிலாந்தில் உள்ள இலண்டன் மாநகரில் 1925 ஆம் ஆண்டு இந்திய அலுவலகக் கட்டடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் திரு.ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்கள் தாவரங்களுக்கும் உயிருண்டு என நிரூபித்தார். இவர் தாவரப் பேரறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாவரத்திற்கும் உயிர் உண்டு என்பதோடு மட்டுமல்லாது அவைகளை தம் உடன் பிறந்தவையாகக் கருதி தமிழ் மக்கள் வாழ்ந்தமையை நற்றிணைப் பாடல் தெளிவுபடுத்துகிறது. தன் காதலன் அருகில் வந்து பேசுவதற்கு நாணி விலகிச் செல்கிறாள் தலைவி. காதலனுக்கு ஏதும் புரியாது காரணத்தைக் கேட்கிறான். தன் தமக்கை உடன் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். சுற்றிப் பார்த்த தலைவனுக்கு அங்கு யாரும் காணாது கண்டு வியக்கிறான். தலைவியே காரணத்தைச் சொல்லுகிறாள். தன் அன்னை சிறுவயதில் புன்னை விதையை விதைத்ததாகவும் அதனைத் தமக்கையாகக் கொள்ளவும் என்று கூறியதைச் சுட்டிக்காட்டி அருகிருக்கும் புன்னை மரத்தைக் காட்டினாள். இதனை,

"நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே"

என்று நற்றிணையில் பாடப்பட்டுள்ளது.

நீரின்றமையாது உலகு:

இந்த உலகம் சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய ஒரு பகுதியே என்பர். பல காலமாய்ச் சுழன்று கொண்டிருக்கிறது. வெப்பம் ஆறிய மேற்பரப்பின் மீதே மக்கள் வாழ்கின்றனர். பூமியின் மையப்பகுதியின் வெப்பம் ஆறாமல் இன்னும் இருக்கின்றது என்பர். இந்தப் பூமி தீ, காற்று, மண், நீர், வான் ஆகியவற்றால் ஆனதே ஆகும். இதன் தன்மை பட்டினப் பாலையிலும் சொல்லப்பட்டுள்ளது. மனித உயிர்களும் பிற உயிர்களும் வாழ்வதற்கு முதல் ஆதாரமாக விளங்குவது நீராகும். நீர் இல்லையெனில் வாழ்வது சாத்தியமாகாது. 70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் 46 கிலோ கிராம் நீர் இருக்க வேண்டும் என்பர். நீர் அத்தகைய இன்றியமையாதது ஆகும். ஆகவே,

”நீரின்றமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுகு"

எனும் குறட்பா அறிவியற் கருத்தோடு கலந்து வருகிறது.

மேலும் பல அறிவியற் கூறுகள் அடுத்த பதிவுகளில் தொடரும்...

நன்றி: பிறதுறைத் தமிழியல்.

0 கருத்துரைகள்:

Post a Comment