இன்று பெரும்பாலான நடுத்தரக் குடும்பத்தின் குழந்தைகள் ஆங்கில பள்ளிகளில் படிக்கிற காரணத்தினால் தமிழ்மொழியை அறவே ஒதுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளில் மட்டுமில்லாமல் சில வீடுகளிலும்கூட ஆங்கிலத்தில்தான் தகவல் பரிமாற்றங்கள் தவறாமல் நடக்கிறது. பள்ளி கலைநிகழ்ச்சிகளிலும் தமிழ் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெறுகிறது. தமிழில் பேசுவது கேவலமாகவும், மட்டமானதாகவும் கருதப்படுகின்ற நிலை நாளுக்குநாள் வலுப்பெற்று வருகிறது.
எத்தனை மொழிகளை அறிந்துகொள்கிறோமோ அந்த அளவுக்கு நம் அறிவு ஆழப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் தொன்மை வாய்ந்த ஒரு மொழியை ஒதுக்குவது நமக்கு மிகப்பெரிய நஷ்டம்.
தமிழில் இருக்கும் இலக்கணச்செறிவும் இலக்கிய வளமும் ஈடு இணையற்றது. எத்தனையோ வெளிநாட்டு அறிஞர்கள் தமிழைக் கற்று, தம்மை ‘தமிழ் மாணாக்கர்’ என்று அறிவிக்க ஆசைப்பட்டனர்.
மொழி என்பது வெறும் அடையாளம் மட்டுமன்று, ஒரு நாட்டின் பண்பாட்டை பதிவு செய்கிற ஊடகமாக அது விளங்கி வருகிறது.
நம் மொழி இலக்கியங்களை விரிவாக படிக்கிறபோது நம்மையும் அறியாமல் நம் பெருமை புலப்பட்டு பூடகமாக நம் நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டுவரும். அடுத்தவருக்கு உதவுகிற குணம், நட்பு, பாராட்டுதல், விருந்தோம்பல், உண்மையை போற்றுதல், ஒழுக்கத்தைப் பேணுதல் ஆகியவற்றை திறம்பட வெளிப்படுத்தும் சொற்சித்திரங்கள் இலக்கியம் முழுவதும் இழையோடுகின்றன. அவற்றை திரும்பத்திரும்ப வாசிக்கும்போது நமக்கு குழப்பம் ஏற்படும்போதெல்லாம் சரியான வரிகள் நினைவுக்கு வந்து நம்மை சரியான திசையில் செயல்பட வைக்கின்றன.
மக்களுக்கு மட்டுமில்லாமல் ஆட்சியாளர் களுக்கும், நிர்வாகிகளுக்கும், வணிகர்களுக்கும், நீதிமான்களுக்கும் அவை கைவிளக்குகளாக வெளிச்சம் காட்டுகின்றன. சிலப்பதிகாரம் ஆராயாமல் நீதி வழங்கப்படாது. இருபக்க நியாயமும் கேட்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் காவியம் அது. தன் மகனுக்கும் சமநீதி வழங்கவேண்டும் என்பது மனுநீதியில் வெளிப்படும் உண்மை. அநியாயம் செய்பவர்களுக்கும் உடன்பிறந்த சகோதரர்கள் கூட உதவுவதில்லை என்று இராமாயணத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். உலகத்தில் முதல் முறையாக எழுதப்பட்ட சுயமுன்னேற்ற நூல் திருக்குறள்.
விருந்தோம்பலை நேசித்து வாசிப்பவர்கள் தங்கள் உணவை வருகிறவர்களுக்கு அளித்துவிட்டு மகிழ்ச்சியால் வயிற்றை நிரப்பிக்கொள்வார்கள். வறுமையிலும் செம்மையாக வாழ்வதை செல்வச்செழிப்பிலும் பணிவாக இருப்பதை உயிர்போகிற நேரத்திலும் கௌரவமாக இருப்பதை நம் தாய்மொழி இலக்கியத்தை போல வேறெதுவும் நம் மனதில் ஆழமாக வேர்விடச் செய்யாது.
ஆங்கில மொழியோடு நம் மொழியையும் நன்றாக கற்போம்.
- சுட்டி விகடன் 16-12-08
0 கருத்துரைகள்:
Post a Comment