ஆங்கோர் ஏழைக்கு..!
'2015-ல் நான் ஐ.ஏ.எஸ்' என்று நம்பிக்கை தொனியில் பேசிய மணிவண்ணனின் ஈமெயில் முகவரி. maniias2015@gmail.com. இப்படி, நம்பிக்கையையே தனது முகவரியாகக் கொண்டிருந்த
மணிவண்ணன்தான் கடந்த மார்ச் 27ல் தற்கொலை செய்துகொண்டார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மூன்றாமாண்டு இ.சி.இ. படித்துவந்தார் மணிவண்ணன். விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் வேட்டியை மாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருக்கிறது. ஆனால் மணிவண்ணன் வாழ்க்கை முழுக்க வருத்தத்தின் வடுக்களே தென்படுகின்றன.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த தேவராசபாளையத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். அப்பா செல்வம் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள, அம்மா காஞ்சனா தனியாக வாழ்ந்து வந்தார். தம்பி மதிவாணனையும், தங்கை சர்மிளாவையும் படிக்கவைக்க
வேண்டும் என்பதற்காக மூன்றாம் வகுப்பைக் கூட தாண்டாத சூழலில் குழந்தைத் தொழிலாளராகியிருக்கிறார் மணிவண்ணன்.
சேலத்தில் மாட்டுப்பண்ணையில் மாட்டுக்குத் தீனி போடுவது உள்ளிட்ட வேலைகளை இரண்டு ஆண்டுகளாக செய்துவந்தார். 2000ம் ஆண்டு மாவட்ட ஆட்சியராக இருந்த அபூர்வா, குழந்தைத் தொழிலாளிகளை மீட்டெடுக்கும்போது மணிவண்ணனையும் மீட்டு, பள்ளியில் சேர்த்தார்.
பொ.மல்லாபுரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு சேர்ந்த மணிவண்ணன் நன்றாகப் படித்தார். வறுமை தீக்குச்சி உரசினாலும் படிப்பில் ஒளிரத் தொடங்கினார். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 461 மதிப்பெண்கள். ப்ளஸ் டூவில் 1159 மதிப்பெண்கள் எடுத்தவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரிகல் கம்யூனிகேஷன் சேர்ந்தார். மூன்றாம் ஆண்டை முடிக்கவேண்டிய சமயத்தில்தான் இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தானும் ஒரு ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்ற கனவுடன் படித்த மணிவண்ணனுக்கு சமூகம் மீது அதீத அக்கறையும், ஆர்வமும் இருந்திருக்கிறது. சேலத்தில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்த கனிஷ்கா, சக்திவேல், சிவகுமார் எனும் மூவரையும் தத்தெடுத்து படிக்க வைத்திருக்கிறார். மூன்று வளர்ப்புக் குழந்தைகளை படிக்கவைக்கும் முதல் கல்லூரி இளைஞன் இவராகத்தான் இருக்கமுடியும்.
"இவங்க மூணு பேருக்கும் அப்பா அம்மா இல்ல. இவங்களைப் பார்த்ததும் என்னைப் பார்த்த மாதிரி இருந்துச்சு. அதான் படிக்கவைக்க ஆசைப்பட்டேன். எனக்கு வர்ற ஸ்காலர்ஷிப், லோன் பணம் எல்லாத்தையும் இவங்களுக்கு தருவேன். இவங்களோட அப்பா, அம்மா யாருன்னு தெரியாது. என்னை ‘அப்பா’ன்னுதான் கூப்பிடுறாங்க. சக்திவேல் நான்காம் வகுப்பும், சிவகுமாரும், கனிஷ்காவும் ரெண்டாம் வகுப்பும் படிக்குறாங்க. 13 வயசுப்பையனுக்கு 23 வயசுப்பையன் அப்பா. இதுகூட நல்லாதான் இருக்கு" என்று நண்பர்களிடம் சொல்லி பெருமிதப்பட்டிருக்கிறார் மணிவண்ணன்
"எனக்கு அப்பா, அம்மா எல்லாமே அரசாங்கம்தான். நான் படிக்கணும்னு நினைச்சதை செயல்படுத்தினது அரசாங்க திட்டங்கள்தான். நான் வாழ்ந்து முடிக்குறதுக்குள்ள 3000 குழந்தைகளையாவது தத்தெடுத்து படிக்கவைக்கணும். என்னை மாதிரி யாரும் குழந்தைத் தொழிலாளரா கஷ்டப்படக்கூடாது. அதுக்குதான் ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்படுறேன். அபூர்வா மேடமைப் பார்த்த பிறகுதான் அவங்களை மாதிரி நானும் ஐ.ஏ.எஸ் ஆகவேண்டுமெனத் தோன்றியது. அவங்கதான் என் ரோல்மாடல். எனக்கு ‘அபூர்வா செந்தமிழன்’னு புனைபெயர் கூட வெச்சுக்கிட்டேன்.." என்று நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார்.
கல்லூரியில் கேட்டுப்பார்த்தால் ‘கவிஞர் மணிவண்ணன்’னு சொல்லுங்க எல்லோருக்கும்
தெரியும் என்கிறார்கள்.
" ‘கருவறை விதைகள்’ அமைப்பின்மூலம் ரத்ததானம், கண்தானம் குறித்து கல்லூரியில்
விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மணிவண்ணன். யாருக்கு எங்கு ரத்தம் வேண்டும் என்றாலும் தகவல் தெரிந்தால் உடனே ஓடிச் சென்று உதவுவார்.
தன்னுடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள் காசுக்காக கஷ்டப்படக்கூடாது என்பதற்காக 'சிறுதுளிகள்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். "நம்முடன் படிக்கும் மாணவ நண்பர்களுக்கு தேர்வுக்கட்டணம், விடுதிக்கட்டணம் போன்றவற்றைக் கட்ட சிரமங்கள் இருக்கின்றன. நீங்கள் உதவினால் அவர்கள் நிம்மதியாகப் படிக்கமுடியும்" என்று கல்லூரி வளாகத்தில் உண்டியல் ஏந்தினார். மூன்று மாதங்களில் 85 ஆயிரம் சேகரித்து 14 மாணவர்களின் கல்விச்சுமையைப் போக்கினார். "மற்ற கல்லூரிகளும் இது மாதிரி செய்தால் படிக்க வறுமை தடையா இருக்காது" என்று கலங்கியபடி பேசியது இன்னமும் எங்கள் கண்களிலேயே இருக்கிறது.
'தாய்ப்பால் வாசம்' என்ற கவிதைத்தொகுப்பை 'அபூர்வா செந்தமிழன்' என்ற புனைபெயரில் ஏப்ரல் 4ல் வெளியிட இருந்த சமயத்தில்தான் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தன்னம்பிக்கை வழிய வலம் வந்த மாணவனுக்கு எப்படி தற்கொலை எண்ணம் வந்தது?’’ என்று கதறுகின்றனர் அவரது தோழர்கள்.
சக நண்பர்கள் சொல்வதெல்லாம் இதுதான்.. " மணிவண்ணன் தமிழை உயிராக நேசித்தவர். படிப்பது இன்ஜீனியரிங் என்றாலும் கவிதை, நிகழ்ச்சிகளில் வரவேற்புரை, தொகுப்புரை என்று முழுக்கவே தமிழ் மாணவனாக இருந்தார். ஆங்கிலக்கல்வி அவருக்குக் கொஞ்சம் தடுமாற்றத்தைத் தந்தது. அதுவும் இல்லாமல் 26 பேப்பர்கள் அரியர்ஸ் வைத்திருந்தார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இறந்திருக்கலாம். வேறு காரணம் இருக்க வாய்ப்பே இல்லை" என்று உறுதியாகக் கூறுகின்றனர்.
"காதல் தோல்வி என்பதெல்லாம் இட்டுக்கட்டிய பொய். பல கனவுகளோடு வளர்ந்தவன் இப்படி ஆகிவிட்டான்" என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்கிறார் கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர்
ஜெய்சங்கர்.
படித்து முடித்த அடுத்த ஆண்டே வேலைக்குப் போகவேண்டுமே என்ற கட்டாய சூழல் மணிவண்ணன் மனதைப் பாதித்திருக்குமோ? 26 பேப்பர்கள் மலைப்பை ஏற்படுத்தி இருக்குமோ? இந்த உலகில் வாழமுடியாமல் போய் விடுவோமா? தன்னை நம்பியிருக்கும் குடும்பம், மூன்று குழந்தைகள், ஐ.ஏ.எஸ் கனவு, 3000 குழந்தைகளையாவது தத்தெடுத்து படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியம் என்பதெல்லாம் கனவாகப்போய்விடுமோ? என்ற அச்சத்தை இன்றைய கல்வி முறை தந்திருக்குமோ?
இந்த சமுதாயம்தான் என்னை செதுக்கியது. இதே சமுதாயத்திற்காக என்னை சிதைத்துக்கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொன்ன மணிவண்ணன் தன் வாழ்க்கையை தற்கொலையில் முடித்துக்கொண்டது ஏன்? இந்தப்பிரச்னையை யாராலும் தீர்க்க முடியாது என்ற தனிமை சிந்தனை மனஉளைச்சலை அதிகப்படுத்தியிருக்குமோ?
ஆனால் ஒன்று. இதை ஒரு மாணவனின் தற்கொலை என்று மட்டும் விட்டுவிட முடியாது.
தமிழ்வழிக் கல்வியில் படித்து கல்லூரியில் காலடி எடுத்துவைக்கும் அத்தனை பேருக்கும் ஆங்கிலம் சரியாகத் தெரியாததால் ஏற்படும் மன உளைச்சலை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
ஆங்கிலம் மொழிதான் என்றாலும் இன்றைக்கு அது அறிவாகவே பார்க்கப்படுகிறது. தாய்மொழி மட்டும் தெரிந்துகொண்டால் வாழ முடியாது என்பது எழுதப்படாத மாய விதியாக இருக்கிறது. பாடதிட்டம் என்பதை தாண்டி வாழ்க்கைப்பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத்தர சமூகம் மறுக்கிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எந்த உறுத்தலும் இல்லாமல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இருக்கிறார்களா? பாடம் நடத்துவது மட்டுமே அன்றாடக் கடமை. அதைச் செவ்வனே செய்து முடித்தால் போதும் என்று நினைக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
மணிவண்ணனின் ஒற்றை ஆன்மா ஒட்டுமொத்த மாணவர்களுக்கான குரலாக ஓங்கி ஒலித்தது யாருக்கும் புரியவில்லையா என்ற ஆதங்கம் கொப்பளிக்கிறது. தமிழ் வழிக்கல்வி படித்த கிராமப்புற மாணவர்கள் இன்னும் ஒரு முறை இதுபோன்ற முடிவை எடுத்துவிடக் கூடாது என்ற ஆவேசம் பிறக்கிறது.
யோசிக்க மறுத்து, விடை தெரியாத கேள்விகள் என்று பரிதாபத்தை அள்ளித் தெளித்து சமூகம் ஒதுங்கிக்கொள்கிறது.
இதைப்படிக்கும் நீங்களும் பரிதாபமாய் ‘உச்’ கொட்டி விட்டு உங்கள் வேலையைப் பார்க்கப்
போகிறீர்களா?
-http://youthful.vikatan.com/index.php?nid=81#cmt241
நன்றி : விகடன் டாட் காம் .
0 கருத்துரைகள்:
Post a Comment