முகநூல் நண்பர்கள் சேர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கோயிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்
(புதிய தலைமுறையில் வெளியான கட்டுரை)
கடந்த வாரம் நமது முகநூல் நண்பர் சங்கர் அஸ்வின் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘இந்த முகநூல் நண்பர்கள் செய்யும் பணி ஆச்சரியமூட்டுகிறது. நீங்களும் பாருங்கள்’ என்று ஓர் இணைப்பு முகவரியையும் அனுப்பியிருந்தார். அது சசிதரன் என்பவரின் முகநூல் பதிவு. அந்தப் பதிவுக்கு 600க்கும்மேல் ஷேர்கள்... ஏகப்பட்ட லைக்குகள், ஏராளமான கமெண்ட்டுகள்.
அப்படி என்னதான் அவர்கள் செய்துவிட்டார்கள்? பிற்காலச் சோழர் காலத்தில் தேவனூரில் கட்டப்பட்டு தற்போது சிதிலமடைந்து போயிருக்கும் மகாதேவர் கோயிலை புனரமைக்கும் பணியில்தான் அந்த முகநூல் நண்பர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இந்த அரும்பணியை முன்னெடுத்துச் செல்லும் சசிதரனை தேவனூரில் சந்தித்தோம். "பொதுவாக என் ஸ்டேடஸ்ட்கள் எல்லாம் சமூகம், தமிழ் ஆர்வம், பாரம்பரியம், தொன்மம், சுற்றுச்சூழல் போன்றவை குறித்த அக்கறையுடனே இருக்கும். என் முகநூல் நண்பர்களும் பெரும்பாலானவர்கள் இத்தகைய ரசனையுள்ளவர்களே. சில தொன்மங்கள் கால ஓட்டத்தில் மனித அலட்சியங்களால் அழிந்து வருவது பற்றி பதிவுகள் எழுதினாலும் நண்பர்களுடன் நேரில் இறங்கி அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற ஆர்வம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.
செஞ்சிக்கு அருகிலுள்ள தேவனூர் மகாதேவர் கோயில் பாழடைந்து கிடப்பது குறித்த பதிவைப் போட்டதும், நண்பர் திருவண்ணாமலை தமிழ்ச்செல்வம், பின்னூட்டத்தில் ‘இதுபோல் பதிவுகள் போடுவதால் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை, கொஞ்சம் பேர் கமெண்ட் போடுவார்கள். சிலர் லைக் போடுவார்கள். நாமே களத்தில் இறங்கி இந்த நிலையை மாற்றவேண்டும்’ என்று கூறியிருந்தார். அதற்குப் பிறகுதான் எனக்குள் உத்வேகம் தோன்றியது. அந்தக் கோயிலை முகநூல் நண்பர்களுடன் சேர்ந்து புனரமைத்தால் என்ன என்கின்ற எண்ணம் வந்தது. தமிழ்ச்செல்வமும் மற்ற நெருங்கிய நண்பர்களும் இதற்கு ஆதரவளிக்க, அக்கறையுள்ள நண்பர்கள் ஒன்று சேருவோம் என்று நான் பதிவிட, பலர் ஒன்று சேரத் தொடங்கினோம். ஓய்வு நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பணிகளை மேற்கொள்வதென்று முடிவு செய்தோம்.
முதல்கட்டமாக மார்ச் 17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் சீரமைப்புப் பணியில் மட்டும் தூத்துக்குடி, கோவை, புதுவை, திருச்சி என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் 40 நண்பர்கள் வந்தனர். இங்கே வளர்ந்திருந்த மரம், செடி, கொடிகளை வெட்ட ஆரம்பிச்சுட்டோம். அதேநேரம் இன்னொரு வகையில் அது உறுத்தலாகவும் இருந்துச்சி... மரம் வளர்ப்போம்... சுற்றுச் சூழல் காப்போம்னு பதிவிடற நாமளே மரங்களை வெட்டலாமாங்கிற குற்ற உணர்ச்சிதான் அது. அதுக்கப்புறம் வெட்டும் மரங்களைவிட அதிக அளவில் மரம் நடறதுன்னு நண்பர்கள் முடிவு செய்தோம். அதனால், சின்னச் சின்ன மண்தொட்டிகள் வாங்கி வச்சிருக்கோம். தமிழக அரசிடம் இருந்து 2000ம் ஆண்டு உலகக் கவிஞர் மாநாட்டில் சிறந்த சமூக சேவகர் விருது வாங்கிய திருமதி. ஜெயந்தி தன்ராஜ், திருச்சியிலிருந்து மரக்கன்றுகள் கொண்டு வருகிறார். அந்த மரக்கன்றுகளை தொட்டிகளில் நட்டு வைத்து, அவை ஓரளவு வளர்ந்தபிறகு, கோடைக்காலத்துக்குப் பிறகு அவற்றை முக்கியச் சாலையிலிருந்து இந்தக் கோயிலுக்குவரும் பாதையெங்கும் நட்டுவைக்க முடிவு செய்துள்ளோம்.
எங்களது இந்த முயற்சி மதம், ஆன்மிகம் சார்ந்ததல்ல. இது முழுக்க தமிழார்வமும் தமிழ்த் தொன்மத்தின் மீது ஆர்வமும் உள்ள நண்பர்களின் ஒன்று சேர்ந்த முயற்சி. எனவே தமிழார்வம் உள்ள எவரும் இந்தப் பணியில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்" என்றார்.
புனரமைப்புப் பணிக்கு வந்திருந்த டாக்டர் சீதாலட்சுமியிடம் பேசினோம். 2010ம் ஆண்டுவரை ஆஸ்திரேலியாவில் மருத்துவராகப் பணிபுரிந்துவிட்டு தற்போது தமிழகத்தில் வசித்துவரும் அவர் கூறும்போது, "வெறும் நூறு, இருநூறு வருட பழமையானவர்கள் தங்களின் வரலாற்றை பெருமையுடன் படிக்கும்போது, பல்லாயிரம் வருடங்களுக்கு மேலான தமிழ் வரலாற்றை மக்கள் புறந்தள்ளுவது வேதனை அளிக்கிறது. வெளிநாடுகளில் ஒரு நூறு வருடத்திற்கு முன்னர் வரைந்த ஓவியத்தில் கூட, அதை வரைந்தவரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நம் கோயிலில் உள்ள பழமையான சிலைகள் வடித்தவர் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் தங்கள் பெயரைக் கூடக் குறிப்பிடாமல் உழைப்பை மட்டும் செலுத்தியதற்கு நன்றிக் கடனாய் நாம் இவைகளைக் காப்பாற்றுவதைத் தவிர வேறென்ன கைமாறு செய்ய முடியும்?" என்றார் நெகிழ்ச்சியாக.
சுந்தர்ராமன் என்பவர் கூறும்போது, "கடந்த மார்ச் 3ம் தேதி கோயிலின் அறங்காவலர் ரவிச்சந்திரன் அவர்கள் அனுமதியுடன் நாங்கள் நேரில் வந்து பார்த்தபோது, பதறிவிட்டோம். கோயிலே தெரியாத அளவுக்கு செடியும் கொடியும் முட்புதருமாக இருந்தது. கருவறையும் மிகவும் மோசமான நிலையில் விளக்கு கூட ஏற்றப்படாமல் இருந்தது. மக்களிடம் தண்ணீர் கேட்டு வாங்கி அங்கிருந்த சிவலிங்கத்தைத் தண்ணீர் ஊற்றிக் கழுவினோம். ஆகம விதிகள் எதுவும் தெரியாது எங்களுக்கு. இருந்தாலும் ஆர்வத்தின் காரணமாகச் செய்தோம். உச்சிக் கால பூஜைசெய்து, சிவப்புராணம் ஓதினோம்.
இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள நிலங்களில் இந்தக் கோயிலின் பாரம்பரியமிக்க தூண்கள், கற்கள் சில வயல்களில் வரப்புகளாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டு வருத்தம் கொண்டோம். அந்தத் தூண்களையும் கற்களையும் நிலச் சொந்தக்காரர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் கோயிலில் வைக்க எங்களாலான முயற்சிகளை நிச்சயம் செய்வோம்" என்றார்.
தமிழ்ச்செல்வம் (திருவண்ணாமலை தழல்) கூறும்போது, "இந்தக் கோயிலை மறுஆக்கம் செய்வதில் எங்கள் நண்பர்கள் வித்யா லட்சுமி (எம்.டெக்), திருச்சியைச்சேர்ந்த செந்தில்குமார் என்கின்ற சிவில் என்ஜினீயர் ஆகியோர் உறுதுணையாய் உள்ளனர். அவர்கள் பல்வேறு பாரம்பரியக் கோயில்களைப் புனரமைத்த அனுபவமுள்ளவர்கள். இவர்கள் ஏற்கெனவே இங்கு வந்து கோயிலை ஸ்கெட்ச் செய்துகொண்டு சென்றுள்ளனர். எங்கள் திட்டம் முதலில் கோயிலில் உள்ள மரம், செடி, கொடிகளைக் கழித்துச் சுத்தப்படுத்திவிட்டு, அதன்பிறகு புனரமைப்புப் பணிகளை தலைவர், அறங்காவலர் மற்றும் ஊர் மக்கள் ஆதரவுடன் தொடங்க வேண்டும். இந்தக் கோயிலின் வடிவத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் அவர்கள் பயன்படுத்திய கற்கள், தூண்கள் இவற்றையே பயன்படுத்தி, கட்டிடத் தொழில்நுட்பத்திலும் அவர்கள் பயன்படுத்திய அதே முறையைப் பயன்படுத்த நினைக்கிறோம்.
அந்தக்காலப் பாரம்பரியத் தொழில்நுட்பத்தின்படி கோயில் கட்டும் கட்டிடக் கலை வல்லுநர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இதில் ஆச்சரியமளிக்கும் விஷயம் அவர்கள் சிமெண்ட் கலவை பயன்படுத்துவதில்லை. பதிலாக சுண்ணாம்பு, மணல், கடுக்காய், வெல்லம், காவி, மஞ்சள் போன்றவற்றைச் சேர்த்து கிரைண்டரில் வைத்து அரைத்த கலவையைக் கொண்டு கட்டி வருகின்றனர். செஞ்சிக்கு அருகிலுள்ள பீரங்கிமேட்டில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருணாச்சலேஸ்வரர்கோயிலையும் உத்திரமேரூர் கைலாசநாதர் கோயிலையும் இதே தொழில்நுட்பத்தில் புதுப்பித்துக் கொண்டுள்ளனர். இவையெல்லாம் எங்களது நம்பிக்கையை அதிகப்படுத்துகின்றன. அதே தொழில்நுட்பத்தில்தான் நாங்களும் இந்தக் கோயிலைப் புதுப்பிக்கப் போகிறோம். இதற்காக எங்கள் குழுவினர் அங்கு சென்று பார்வையிட்டு வந்துள்ளனர்.
இந்தக் கோயிலின் தன்மை சிறிதும் மாறாமல் கட்டப்படும் நிலையில் கோயிலின் உள்ளே பல்வேறு இடங்களில் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றைப் படியெடுக்க தொல்பொருள் துறை முன்னாள் அதிகாரி குடவாசல் பாலசுப்பிரமணியம் அவர்களை அணுக உள்ளோம்" என்றார்.
பெரிய நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள், வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக இங்கு வந்தவர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர், பிசினஸ் மேன்கள், கல்லூரி மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பு நண்பர்களும் இந்த புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேவனூர் ஊராட்சி மன்றத் தலைவர் எல். அண்ணாமலை இதுகுறித்துக் கூறும்போது, "வருஷத்துக்கு மகாசிவராத்திரி, சித்ரா பௌர்ணமி ஆகிய ரெண்டு தினங்களில் மட்டும்தான் மக்கள் இங்கே சாமி கும்பிட வருவோம். இப்ப இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டால், தினமும் சாமிக்கு தீபாரதனையும் வழிபாடும் நடக்கும். அது மக்களுக்கு நல்லது தானே. இந்த ஊருக்குச் சம்பந்தம் இல்லாத சிலர் இந்தப் பணியைச் செய்ய வந்திருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது. மிக நல்ல முயற்சி. உடனே மக்களிடம் கூறி இவர்கள் கேட்கும் உதவிகளைச் செய்யுமாறு கூறியுள்ளேன்" என்றார்.
‘பாழடைந்து முழுக்க முழுக்கச் சிதைந்து போயிருக்கும் இந்தக் கோயிலைப் புனரமைக்க வேண்டுமென்றால் பல கோடிகள் செலவாகும்போல் தெரிகிறதே?’ என்று யத்தீந்தர் என்பவரிடம் கேட்டோம்.
"இப்போதுதான் கொஞ்சம் நண்பர்கள் இணைந்துள்ளோம். இது மிகப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நட்புச் சங்கிலியை ஒரு தொண்டு நிறுவனமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். மேலும் முகநூல் மூலமும் அதற்கான நிதியைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. கோயில் என்றல்ல கல்வி, சமூக சேவை, மரம் வளர்ப்பு என்று சமூகம் சார்ந்த பல்வேறு பொதுப்பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்கின்ற ஆர்வம் எங்கள் அனைத்து நண்பர்களிடமும் உள்ளது. எனவே அதனைச் செயல்படுத்துவதில் சிக்கல் எதுவும் இருக்காது" என்றார் யத்தீந்தர். இவர் சுலேகா.காமின் மேனேஜர்.
கோயில் அறங்காவலர் ரவிச்சந்திரனுடன் தொலைபேசியில் பேசினோம்: "இந்தக் கோயிலைப் புனரமைக்கணும்கிறது ஊர் மக்கள் எல்லோரின் ஆசை. முன்பு கோயில் அறங்காவலராய் இருந்த என் தந்தை மறைந்த பெருமாள் கவுண்டர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். நானும் முயன்றேன். அதன் பலனாக இப்போ கோயில் புனரமைப்புக்காக 96 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வர சிறிது காலம் ஆகும். இதற்கிடையே இந்த நண்பர்கள் வந்து கோயிலை சுத்தம் செய்ய ஆர்வமாகக் கேட்டவுடன் நானும் ஒப்புக் கொண்டேன். எங்கள் ஊருக்குத் தொடர்பில்லாதவர்கள் இப்படி ஒரு பணியில் ஈடுபட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது..." என்றார்.
சசிதரன் தொடர்பு எண்: 9840956955
மகாதேவர் கோயில்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவனூரின் பாரம்பரியச் சிறப்புமிக்கது இந்த மகாதேவர் கோயில். சோழர் காலம் முதல் இன்றுவரை திருநாதீசுவரர் என்றே இங்குள்ள இறைவன் அழைக்கப்படுகிறார்.
இக்கோயில் பிற்காலச் சோழ மன்னரால் கட்டப்பட்டது. அப்போது, கருவறை, அர்த்த மண்டபம், இடை நாழி, மகா மண்டபம், திருச்சுற்று முக மண்டபம், அம்மன் கோயில், எட்டு பரிவார ஆலயங்கள், திருவோலக்க மண்டபம், ஊஞ்சல் மண்டபம், உற்சவ மண்டபம், நந்தி மண்டபம், பலி பீடம், கொடி மரம், ராஜ கோபுரம், மண்டபத்தளி, நந்தவனம் ஆகிய பல்வேறு பகுதிகளுடன் இக்கோயில் பெரும்புகழோடு விளங்கியது. இப்பகுதியில் இக்கோயில் சுற்று மதிலைப் போன்று உயரமான மதில் எக்கோயிலுக்கும் இல்லை.
சோழர்களுக்குப் பின்பு பாண்டியர்களாலும் விஜயநகர மன்னர்களாலும் நாயக்கர்களாலும் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
ஆற்காடு நவாப்புக்கும் செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்குக்கும் நடந்த போரில் இக்கோயில் முதலில் கொள்ளை அடிக்கப்பட்டு இடிக்கப்பட்டது. கோயிலின் திருவோலக்க மண்டபம், அம்மன் கோயில் திருச்சுற்று மாளிகை, கோயில் விமானம் முதலியவை இடிக்கப்பட்டன. கோயிலில் இருந்த செப்புத் திருமேனிகள் களவாடப்பட்டன. நந்தி உட்பட அழகிய சிற்பங்கள் சிதைக்கப்பட்டன.
தேவனூருக்கருகில் நீலம் பூண்டி எனும் இடத்தில்தான் ஆற்காடு நவாப்புக்கும், தேசிங்கிற்கும் போர் நடந்தது. அங்கேயே தேசிங்கு மரணமடைந்தார். அவரது கல்லறை இன்றும் அங்கு உள்ளதைக் காணலாம்.
-பெ. கருணாகரன்
0 கருத்துரைகள்:
Post a Comment