நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Saturday, March 3, 2012

நமது கல்விமுறை எங்கே செல்கிறது?


ஆசிரியை உமா மகேஸ்வரி

சென்னையில் ஒரு தனியார் பள்ளி வகுப்பறையில் ஆசிரியை மாணவர் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது. சென்னை பாரிமுனை அரண்மனைக்காரத் தெருவில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி மற்றும் வேதியியல் ஆசிரியையாகப் பணிபுரிந்த மந்தைவெளி நார்மன் தெருவைச் சேர்ந்த ஆசிரியை உமா மகேஸ்வரியை (39) ஒன்பதாம் வகுப்புச் சேர்ந்த மாணவர் ஒருவர் கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிரவைத்துள்ளது.
மேலை நாடுகளில் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களைச் சுட்டுக்கொல்லும் நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதுண்டு. நம் நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகளை பலர் எதிர்பார்த்திருக்கவில்லை. காரணம் அவர்கள் நமது கல்விமுறையின் அவலங்களை பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. நான் வழக்கமாகச் சொல்லப்படும் மேலை-கீழை ஒப்பீடுகளை இங்கு சுட்டவில்லை. ஒரு உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்காக வருத்தப்படும் இந்த வேளையில் இதற்கான பின்னணி மற்றும் சமூக அவலங்கள் பற்றி நாம் இனியேனும் சிந்திக்கவேண்டிய தேவையை இந்நிகழ்வு உருவாக்கியிருக்கிறது.
இந்நிகழ்வு ஆங்கிலோ இந்தியன் அல்லது மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றுள்ளது எனப் பிரித்து அணுகவேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். அரசுப்பள்ளிகளிலும் அரசுப்பொதுத்தேர்வு, தேர்ச்சி, மதிப்பெண்கள் என மாணவர்களை வறுத்தெடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது. பள்ளிகளில் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிப்பதற்காக மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை அனைத்துநிலைகளிலும் அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு தீவிர உளவியல் நெருக்கடிகளை உருவாக்குகிறார்கள்.
தமிழகத்தை முதல் மாநிலமாக்குவேன் என்று வருகின்ற ஆட்சியாளர்கள் முழங்குவதுபோல் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கல்வி அதிகாரிகளும் முழங்கத்தொடங்கிவிட்டார்கள். இதன் விளைவு ஆசிரியர்களையும் மாணவர்களையும் தீவிர மன உளைச்சலுக்கு உட்படுத்துகிறது. காலை-மாலை, சனி-ஞாயிறு மற்றும் அனைத்து விடுமுறை தினங்களிலும் சிறப்பு வகுப்புகள் என்றபெயரில் மாணவர்கள் வதைபடுகிறார்கள். மழையின்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கும்போது சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்கிற அறிவிப்பும் கூடவே வருவதைப் பார்க்கும்போது இதன் மறுபக்கம் புலனாகும்.
தமிழகத்தில் மஞ்சள் பத்திரிக்கைகள், சீரழிவுச் சேனல்கள் நடத்துபவர்கள் கூட அரசுப் பொதுத்தேர்வு வருகிறபோது மாணவர்களையும் பெற்றோர்களையும் கூடவே ஆசிரியர்களையும் பீதியூட்டத் தொடங்கிவிடுகிறார்கள். தேர்வுக்குச் செல்வது போருக்குச் செல்வதுபோல் ஆகிவிட்டது. ‘ஜெயித்துக்காட்டுவோம்’ என்று கொலைவெறியை மாணவர்கள் மீது ஏற்றுகிறார்கள்.
ஓராண்டில் மனப்பாடத்திறனை மட்டும் மதிப்பிடும் நமது தேர்வு முறை முற்றாக ஒழிக்கப்படவேண்டும். அதற்கு மாற்றாக எளிய, சிறிய ஒருங்கிணைந்த மதிப்பீட்டு முறைகள் கொண்டுவரப்படவேண்டும். வரும் கல்வியாண்டில் ஆறு முதல் எட்டு வகுப்பு வரை அறிமுகம் செய்யப்படும் மூன்று பருவ முறை கூட வெறும் மனப்பாடத்திறனை மதிப்பிடும் முறைதானே தவிர பெரும் புரட்சிகரமான ஒன்றல்ல. மாணவர்களின் ஒட்டுமொத்த திறன்களை மதிப்பிடாத தேர்வு முறைகளால் எவ்வித பலனுமில்லை.
மதிப்பெண்ணுக்கு கணக்கிடப்படும் பாடங்களைத் தவிர உடற்கல்வி, ஓவியம்,மதிப்புக்கல்வி,அறிவியல் தமிழ், சுற்றுச்சுழல் கல்வி, வாழ்க்கைக்கல்வி,வேளாண்மை ,கைத்தொழில் உள்ளிட்ட பாடங்களுக்கு சிறிது கூட நமது பள்ளிகளில் இடமிருப்பதில்லை. மதிப்புக்கல்வி (value education) மதக்கல்வியாக மாறிப்போனதுதான் இங்கு நடந்த விநோதம். உடற்கல்விப் பாடவேளையில் மாணவர்கள் விளையாடாமல் படித்துக்கொண்டோ, தேர்வு எழுதிக்கொண்டோ இருப்பதை நாம் அன்றாடம் காணமுடியும்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவன் சில மணிநேரம் தூங்குவது போக எஞ்சிய நேரம் முழுமையும் புத்தகமும் கையுமாக இருப்பதைத்தான் இந்த அருவெருக்கத்தக்க சமூகம் விரும்புகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மதிப்பெண் பெறும் ATM எந்திரத்தைப்போல நினைப்பது மிகவும் கொடூரமானது. இந்த மாதிரியான எந்திரங்களை உருவாக்கும் தனியார் பள்ளிகளை இவர்கள் சரணடைகிறார்கள். அவை மாணவர்களின் சிறைக்கூடமாகத்தான் செயல்படுகின்றன.
இந்தக் கொலை நிகழ்வில்கூட இந்தி பாடம் சரியாகப் படிக்காமல் அம்மாணவன் குறைவான மதிப்பெண் வாங்கியதற்காக கண்டித்ததாகவும் பெற்றோரிடம் புகார் செய்ததாகவும் செய்தி வருகிறது. சமச்சீர்க்கல்விப் பாடநூற்கள் அமலில் உள்ள இந்த கல்வியாண்டில் அரசு அளித்துள்ள ஐந்து பாடங்களை விட கூடுதல் பாடங்களை இந்த தனியார் பள்ளிகள் ஏன் சொல்லித்தருகின்றன? ஒன்பதாம் வகுப்பில் இவ்வாறு செய்வதை அரசு ஏன் அனுமதிக்கிறது? அரசு ஏன் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?
ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடங்களையும் பதினொன்றாம் வகுப்பில் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களையும் படிக்கவைத்து தனியார் பள்ளி மாணவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இதை அரசும் கண்டுகொள்ளவதில்லை. பெற்றோர்களும் இதை விரும்பித்தான் அப்பள்ளிகளில் தன்பிள்ளைகளை சேர்க்கப் போட்டிபோடுகிறார்கள்.
கல்வியை அரசு வியாபாரமாக்கியதன் விளைவு இது. முதலில் அரசு தனது கொள்கைகளை உடன் மாற்றிக்கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் வழக்கமான பழைமைப் பிடிப்புகளினின்று விடுபட்டு புதிய மாற்றங்களை உள்வாங்க வேண்டும். அதற்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மதிப்பெண் பெறும் எந்திரமாகக் கருதாமல் மானுட மதிப்புக்களை அறிந்து செயல்படவேண்டும்.
இந்தக் கொலையை செய்தது அந்த மாணவன் மட்டுமல்ல. நமது அரசுகள், சமூகம், பள்ளிகள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என அனைத்துத்தரப்பிற்கும் இந்தக் கொலையில் பங்குண்டு. இனியும் இதைப்போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க ஒட்டுமொத்த சமூகமும் திருந்தவேண்டும். இல்லாவிட்டால் இவைபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகிவிடும். இது நடக்குமென்று தோன்றவில்லை.
  
-மு.சிவகுருநாதன்

கானல் நீரான கல்வி உரிமை


- மு. சிவகுருநாதன்


(மக்கள் கல்வி இயக்கம் வெளியிட்ட கல்வி உரிமைச் சட்டம் – நாம் ஏமாற்றப்பட்டக் கதை – என்ற குறுநூல் குறித்த பார்வை)

கல்வியாளர் பேரா. அனில் சத்கோபால் எழுதிய பொதுப்பள்ளி முறை குறித்த கட்டுரை, தேர்வு முறைகேடுகள் குறித்த கே. சுப்பிரமணியன் எழுதிய கட்டுரை, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் முகுந்த் துபே எழுதிய ”கல்வி உரிமைச்சட்டம்” என்ற பெயரில் நாம் ஏமாற்றப்பட்டதை வெளிப்படுத்தும் கட்டுரை என மூன்று கட்டுரைகளை பேரா. சே. கோச்சடை மொழிபெயர்ப்பில் மக்கள் கல்வி இயக்கத்தின் 8 -வது வெளியீடாக வந்துள்ளது. இந்தூல் பற்றி “பொதுப்பள்ளி முறையும் கல்வி உரிமைச் சட்டமும்” என்ற முன்னுரையை பேரா. அ. மார்க்ஸ் அளித்துள்ளார்.
அ. மார்க்ஸ் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போல் சமச்சீர்க்கல்வி பிரச்சினை கல்வியில் அனைவரும் பங்கு பெற வழிவகுத்திருப்பது உண்மை தான். ஆனாலும் அப்பிரச்சினை ஓய்ந்த பிறகு கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகம் வெளிப்படாமல் தேங்கிப் போயிருக்கிற நிலையும் உள்ளது. தற்போதிருக்கும் பாடநூற்களிலுள்ள களைய வேண்டிய முறைபாடுகள் இருக்கின்றன. அவைகள் திருத்தப்படும்போது புதிய ஆட்சியாளர்களை தங்களுக்குச் சாதகமானவற்றை உள்ளே நுழைக்கும் அபாயம் குறித்த எச்சரிக்கையும் மிக அவசியம். தேர்வுகள் குறித்தும் அடுத்த கல்வியாண்டில் தமிழக அரசு அமல்படுத்தும் மூன்று பருவ முறைத் தேர்வுகள் பற்றியும் முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
கோத்தாரி கல்வி ஆணையம் (1966-68) வலியுறுத்திய பொதுக்கல்வி முறையை (Common School System) அரசு தொடர்ந்து பாழாக்கியதோடு ”கட்டாய, இலவசக்கல்வி உரிமைச் சட்டம் 2009” என்ற பெயரில் நாக்கில் தேன் தடவி ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கல்வியை தனியார்மயமாக்கியுள்ள அரசு வெறும் 25% ஒதுக்கீடு என்ற வரையறை மூலம் மக்கள் வரிப்பணத்தைத் தனியார் கைகளுக்கு மாற்றிவிடும் பணியை செவ்வனே செய்து முடித்திருக்கிறது. கல்லாமையை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம் என்பதெல்லாம் வெற்று முழக்கங்களாக அரசுகள் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு பயன்படுவதாகவே இருக்கிறது.
சில நெறிமுறைகளை மாநில அரசுகளே தீர்மானிக்கலாம் என்று சொல்கிற போது இவற்றை நீதிமன்றங்கள் கூட நிலைநாட்ட முடியாமற்போகும் அபாயத்தை முகுந்த் துபே வெளிப்படுத்துகிறார். பயிற்சி பெறாத ஆசிரியர்களை பணியில் அமர்த்துதல், பல் வகுப்புப் போதனை போன்றவற்றிற்கு கல்வி உரிமைச் சட்டம் சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் 2009 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வந்து விட்டாலும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் அதற்குரிய சட்டங்களை வெளியிட்டு குறைபாடுகள் உள்ள இச்சட்டத்தை பெயரளவிலாவது செயல்படுத்த முனையவில்லை. மிக அண்மையில் தான் தமிழக அரசு இதற்குரிய சட்டத்தை இயற்றியிருக்கிறது. 2012-2013 ஆம் கல்வியாண்டிலாவது இச்சட்டத்தை நிறைவேற்றுவார்கள் என்று நம்புவோம்.
25% ஒதுக்கீட்டிற்குரிய குழந்தைகளைத் தேர்வு செய்வதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சம் என தமிழக அரசு வருமான வரம்பு நிர்ணயம் செய்துள்ளது. அரசு சலுகைகள் பெற வருமான வரம்பு ரூபாய் 1 லட்சம் என்று இருக்கும் போது இதற்கு மட்டும் ரூபாய் 2 லட்சம் வரம்பு நிர்ணயிப்பது சரியாக இல்லை. இதனால் சாமான்ய மனிதர்களின் வீட்டுப் பிள்ளைகளை விட நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பலனடைவர்.
கல்வி உரிமைச் சட்டத்திற்கான வயதெல்லையை 6-14 என்று வைத்திருப்பதன் மூலம் 0-6, 14-18 வயதுக் குழந்தைகளின் கல்வியை அரசு புறக்கணிப்பது தெளிவாகத் தெரிகிறது. தொடர்ந்து நமது ஆட்சியாளர்கள் இந்த மாதிரியான போலி உரிமைச் சட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதை இந்நூலுள்ள கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன.
கல்வியைச் சீரழிப்பதில் தேர்வு தொடர்பான முறைகேடுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு உண்டு. அரசுப் பணியாளர் தேர்வாணைய முறைகேடுகள் தினமும் சந்தி சிரிக்கின்றன. தேர்வில் காப்பியடித்தல், ஆள் மாறாட்டம், வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாதல் போன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால் கல்வித்துறையே சீரழிகிறது.
பெரும்பாலான தனியார் பள்ளிகள் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க மாணவர்களுக்குத் தேர்வு அறையில் சொல்லிக் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு கல்வித்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோர் உதவுகின்றனர்.
இதற்காக தேர்வுகளை அறவே ஒழித்து விடுவது என்ற புரட்சிகரமான ஆலோசனை தீர்வாகாது என்றும் மாறாக தேர்வு அமைப்பிலுள்ள குறைகளைக் களைந்து கல்வித் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே. சுப்பிரமணியனின் கட்டுரை வலியுறுத்துகிறது.
இன்று நமது மத்திய, மாநில அரசுகள் கல்வியைப் பற்றி சிறிதும் யோசிப்பதில்லை. பாமர மக்களுக்கு கல்வி சரிவர சென்றடையத் தடையாக இருப்பது இன்றைய அரசுகளே என்றால் அது மிகையல்ல. சமூகம் கல்வியின் பால் அக்கறையுள்ளோர் அரசுக்குக் கொடுக்கும் அழுத்தங்களின் விளைவாகவே ஏதேனும் சிறிய முன்னேற்றமாவது காணப்படுகிறது.
பொதுமக்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பாரும் கல்வி பற்றிய சிந்தனையிலும் அதில் செய்ய வேண்டிய மாற்றங்களிலும் பங்கெடுக்க வேண்டும். கல்வியை சீரமைப்பது – ஒழுங்குபடுத்துவது போன்றவற்றிற்கு அரசுக்கு பல்வேறு இடங்களிலிருந்து நெருக்குதல்கள் தரப்பட வேண்டும். அப்போது கல்வியில் மட்டுமல்ல எதிலும் மாறுதல்கள் நிகழும்.
அந்த வகையில் பேரா. சே.கோச்சடையின் மொழி பெயர்ப்பில் கல்வியாளர் பேரா. பிரபா.கல்விமணி வெளியிட்டிருக்கும் இக்குறுநூல் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்பதில் சிறிதும் அய்யமில்லை.
கல்வி உரிமைச் சட்டம் – நாம் ஏமாற்றப்பட்ட கதை.
பேரா. அனில் சத் கோபால், கே. சுப்பிரமணியன், முகுந்த் துபே
(மொ) பேரா. சே. கோச்சடை.
வெளியீடு :
மக்கள் கல்வி இயக்கம்
7-பாலையா இல்லம்
பாரதிதாசன் நகர்,
கல்லூரிச்சாலை,
திண்டிவனம் – 604 001.
செல் : 94426 22970.

Friday, March 2, 2012

தண்ணிய குடிங்க, தண்ணிய குடிங்க.....

தண்ணிய குடிங்க, தண்ணிய குடிங்க
சொன்னா கேட்டாத்தானே?
அட்லீஸ்ட் மருத்துவர் என்ன சொல்றாருன்னு கேளுங்க...

உடலில் உள்ள பாகங்களில், மூளை, இதயம் போன்ற உறுப்புகளுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றது, சிறுநீரகம். ரத்தத்தை சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்றும் இந்த உறுப்பின் பணி, அளவிடற்கரியது. பொதுவான காரணங்களால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது போல, சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடித்தல், உடற்பயிற்சி இன்மை, மதுப் பழக்கம், உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என, பல காரணங்களை அடுக்கலாம்.

சிறுநீரக கல்: சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னையில் முக்கியமானது, கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன. இது, மிகச் சிறு துகள் அளவில் துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக் கூடும். பெரிய கற்கள் கூட, அறிகுறியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கற்களின் வெளிப்பரப்பு, முட்களைப் போல இருந்தால், அவை சிறுநீர் பாதையில் உராய்ந்து, சிறுநீரில் ரத்தம் வெளியாகலாம். இவை பரம்பரை காரணமாக, போதிய நீர் குடிக்காததால் உருவாகலாம். அசைவ உணவை தவிர்ப்பது, போதிய நீர் குடிப்பது, சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் அடைப்புக்கு தாமதமில்லாத சிகிச்சையால், கல் உருவாவதை தவிர்க்கலாம்.

அறிகுறிகள்: இதன் முக்கிய அறிகுறி, வயிற்று வலி. சிறுநீர் பாதையில் வலது, இடது பக்க கீழ் முதுகு பகுதியில் வலி வந்து, விரைகள் வரை பரவலாம். வாந்தி, நீர்க்கடுப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீரின் வேகம் தடைபடுதல், காய்ச்சல் ஏற்படலாம். பெண்களை விட ஆண்களுக்கு, சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு, மூன்று மடங்கு அதிகம். இந்நோயாளிகள் தக்காளி, நெல்லி, முந்திரி பருப்பு, வெள்ளரி, கறுப்பு திராட்சையை தவிர்க்கலாம். பால், 250 மி.லி.,க்கு மிகாமல் எடுக்கலாம். எலுமிச்சை ஜூஸ், இளநீர் நிறைய குடிக்கலாம். முள்ளங்கி, வாழைத்தண்டு, சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால், பெரும் பயன் உள்ளதாகக் கருத முடியாது. பார்லி, கொள்ளு, பாகற்காய், காரட் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவரின் சராசரி சிறுநீர் அளவு, ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை இருக்கலாம். கல் உருவாகும் பிரிவினர், 2 லிட்டர் சிறுநீர் வெளியேறும் அளவு, 3 முதல் 4 லிட்டர், தண்ணீர் குடிக்க வேண்டும். 4 மி.மீ.,க்கு கீழ் உள்ள கற்கள், பெரும்பாலும் தானாகவே வெளியேறி விடுகின்றன. 6 மி.மீ.,யை விட பெரியவை, தானாக வெளியேறுவதில்லை. இதற்கு தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

சிறுநீர் சிக்கல்: புராஸ்டேட் சுரப்பி, ஆண்களுக்கே உரியது; இனப் பெருக்கத்துடன் தொடர்புடையது. இது, சிறுநீர் பாதையின் அடியில், சிறுநீர்த் தாரையின் முதற்பகுதியை சூழ்ந்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில், சிறுநீர்த் தாரையை அமுக்குகிறது. இதனால், சிறுநீர் பாதை அடைபட்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் தேங்கும். அந்நிலையில், உடனடியாக அடைப்பை நீக்க வேண்டும்.

வயதானவர்களுக்கு சிறுநீர் சிக்கல் ஏற்படும்போது, ஆசன வாய்க்குள் விரல் விட்டு பார்த்தால், புராஸ்டேட் சுரப்பியின் இருபக்க மடல்கள் துருத்திக் கொண்டிருப்பதை உணரலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், முயற்சிக்கும்போது உடனடியாக சிறுநீர் வெளி வராதது, சிறுநீர் வெளி வருவதை கட்டுப்படுத்த முடியாதது, சிறுநீர் நின்று நின்று வருவது, நாட்கள் செல்லச் செல்ல, கிருமி தாக்கம் ஏற்பட்டு, சிறுநீர் தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சல், அடிவயிற்றில் வலி தோன்றுவது என, பாதிப்பை ஏற்படுத்தும். புராஸ்டேட் எந்தளவு வளர்ந்துள்ளது, மலக்குடலின் சீதச்சவ்வை பாதித்துள்ளதா, புற்றுநோய் வளர்ச்சியா என அறிவது அவசியம். 50 வயதானவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும்.

அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, “எண்டோஸ்கோபி’ சிகிச்சை செய்யப்படுகிறது. முன்னதாக, வழக்கமான ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்படும். மேலும், சிஸ்டோஸ்கோபி, பை உள்நோக்கல் சோதனையும் செய்யப்படும். இதன் மூலம், பாதிப்புக்கான வேறு காரணங்களையும் அறியலாம்.

டாக்டர் டி.ஆர்.முரளி,
சிறுநீரியல் துறை நிபுணர்,
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.

சூரிய குடும்பம் 3 (பூமி) : நட்சத்திரப் பயணங்கள்


நட்சத்திரப் பயணங்கள் என்ற எமது பிரபஞ்சம் பற்றிய அறிவியல் தொடரில் தற்போது சூரிய குடும்பம் பற்றி ஆராய்ந்து வருகிறோம். சென்ற தொடரில் எமது பூமியின் உபகோளான சந்திரன் பற்றி பார்த்தோம்.
இத்தொடரினைப் படித்து வாசகர் ஒருவர் பூமியின் சுழற்சியைக் கொண்டு எவ்வாறு நேரம் மற்றும் மாதங்கள் கணிக்கப் படுகின்றன எனும் வினாவினை எழுப்பியிருந்தார். இத் தொடரில் அதற்கான விடையையும் பூமி பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்வோம்.



சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ள கிரகமான பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது எனலாம். சூரியனைச் சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பை உடைய நான்கு கிரகங்களிலும் (Terrestrial Planets) மிகப் பெரியதான பூமி, ஏனைய எல்லா கிரகங்களிலும் மிகவும் அடர்த்தி கூடியதுடன் ஐந்தாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்குகின்றது. சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி (acccretion) மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது. எனினும் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி 1 பில்லியன் வருடங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் தரைப் பரப்பை பெருமளவில் ஆக்கிரமித்துள்ள சமுத்திரங்களின் காரணமாக விண்வெளியிலிருந்து பார்க்கும் போது அழகிய நீல நிறமாகத் தென்படுவதால் 'புளூ பிளானெட்' என பூமி அழைக்கப் படுகின்றது. புவி மேற்பரப்பில் 70.8% வீதம் தண்ணீரால் மூடப்பட்டுள்ளது. மேலும் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மூலகங்களின் அளவை ஒப்பிடும் போது சிலிக்கன் மிக அதிகமாக 60.2% வீதமும், அலுமினியம் 15.2% வீதமும் நீர் 1.4% வீதமும் கார்பனீரொட்சைட் 1.2% வீதமும் காணப் படுகின்றன.



பூமியின் திணிவு (5.98 * 10 இன் வலு 24) Kg ஆகும். பூமியின் மொத்தத் திணிவில் அதிக பட்சமாக இரும்பும் (32.1%), அதையடுத்து ஆக்ஸிஜெனும் (30.1%) தொடர்ந்து சிலிக்கனும் (15.1%) காணப்படுகின்றன. நாம் வாழும் பூமி இன்னமும் 500 மில்லியன் தொடக்கம் 2.3 பில்லியன் வருடங்களுக்கு உயிர் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இனி பூமி பற்றி சுருக்கமான விபரங்களைப் பார்ப்போம் -

1.பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல எடுக்கும் காலம் - 0.99 நாள் அல்லது 23 மணி 56 நிமிடம் 4 செக்கன்
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 365.256366 நாட்கள் அல்லது 1.0000175 வருடம்
3.சூரியனைச் சுற்றி பயணிக்கும் வேகம் - 29.783 Km/s
4.பூமியின் சராசரி ஆரை - 6371 Km
5..துருவ ஆரை - 6356.8 Km
6.சுற்றளவு (கிடை அச்சில்) - 40 075.02 Km
7.நீள் கோள மேற்பரப்பளவு - 510 072 000 Km2
8.கனவளவு - 1.0832073 * 10 இன் வலு 12 Km3
9.நிறை - 5.9736 * 10 இன் வலு 24 Kg
10.சராசரி அடர்த்தி - 5.5153 g/cm3
11.மையத்திலிருந்து ஈர்ப்பு விசை - 9.780327 m/s2 அல்லது 0.99732 g
12.தப்பு வேகம் - 11.186 Km/s
13.சாய் கோணம் - 23.439281 பாகை
14.எதிரொளி திறன் - 0.367
15.மேற்பரப்பு வெப்பம் - 184 K(குறைந்த), 287 K (மத்திய), 331 K (அதிக பட்ச)
16.வளிமண்டலத்தில் மேற்பரப்பு அழுத்தம் - 101.3 Pa
17. துணைக் கோள் - 1 (சந்திரன்)

பூமியானது தன் அச்சில் சுழலும் மற்றும் சூரியனையும் சுற்றி வரும் தன்மைகளைக் கொண்டு காலம் கணிக்கப் படுகின்றது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் சராசரியாக 24 மணித்தியாலங்கள் அல்லது ஒரு நாளாகவும் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் காலம் 365 1/4 நாட்கள் அல்லது ஒரு வருடமாகவும் கணிக்கப் படுகின்றது. இதில் சூரியனை சுற்றி வர எடுக்கும் காலத்தில் ஒரு நாளின் கால் பங்கை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கணிப்பிட்டு நான்காவது ஆண்டில் பெப்ரவரி மாதம் 29ம் திகதியாக சேர்க்கப்படுகின்றது. இதனையே நாம் லீப் வருடம் என்கிறோம். பண்டைய காலத்தில் சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டு மாதங்கள் கணிப்பிடப்பட்ட போதும் தற்போது அந் நடை முறை பின்பற்றப் படுவதில்லை. ஓரு மாதத்துக்கு மிக அண்மையாக அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளர்பிறை 14 நாட்களும் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேய்பிறை 14 நாட்களும் மொத்தமாக 28 நாட்களே சந்திர மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் சராசரியாக சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி சூரியனையும் சுற்றி வரும் வீதத்துடன் ஒப்பிடுகையில் முதல் பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை 29.53 சராசரியாக 30 நாட்கள் எடுப்பதாக வானியலாளர்கள் கணித்துள்ளனர். இது சைனோடிக் மாதம் எனப்படுகின்றது.

பூமியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து 23.4 பாகை செங்குத்தாக விலகி சாய்ந்திருப்பதால் பருவ நிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் படுவதே இதற்குக் காரணமாகும். வட துருவம் சூரியனை நோக்கி உள்ள போது வடவரைக் கோளத்தில் கோடை காலமும் சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர் காலமும் ஏற்படுகின்றது. இதே போன்றே தென் துருவத்திலும் எதிரிடையாக காலநிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. துருவப்பகுதிகளின் உச்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வருடத்தின் ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாதம் இரவு என பருவங்கள் நிகழ்கின்றன. புவியின் சாய்வு காரணமாக சிறிது ஒழுங்கற்ற இயக்கம் நிகழ்வதாக வானியலாளர்கள் கருதுகின்றனர். பூமி மற்றும் சந்திரனின் ஈர்ப்பு காரணமாக துருவ நகர்வுகள் நிகழ்கின்றன. இது சாண்ட்லேர் தள்ளாட்டம் எனப் படுகின்றது. மேலும் சூரியன் பூமிக்கிடையிலான தூரமும் மிகச்சிறியளவில் அதிகமாகிக் கொண்டு வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.



பூமியின் தரையியல்பைப் பார்ப்போம். பூமியில் மிக உயர்ந்த இடமாக வட இந்தியாவின் இமய மலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரமும் (8048 m) மிகத் தாழ்ந்த இடமாக பசுபிக் பெருங்கடலிலுள்ள மரியானா ஆழியும் (10 911.4 m or 11 Km) காணப்படுகின்றன. பூமியில் உள்ள நிலப் பரப்பு 7 கண்டங்களாகவும் 5 சமுத்திரங்களாகவும் வகுக்கப் பட்டுள்ளது. சமுத்திரங்களில் அடங்கியுள்ள நீரில் 97.5% வீதம் உப்பு நீராகவும் 2.5% வீதம் தூய நீராகவும் தூய நீரில் 68.7% வீதம் பனிக்கடிகளாகவும் காணப்படுகின்றன.


பூமியின் வளி மண்டலத்தை எடுத்துக் கொள்வோம். வளி மண்டலத்தின் மேற்பகுதி ஓசோன் படலத்தால் சூழப் பட்டிருப்பதால் பிரபஞ்ச பின்புலக் கதிர்கள் மற்றும் சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலெட் எனப் படும் புற ஊதாக் கதிர்கள் தடுக்கப் படுகின்றன. இதனால் உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழல் பூமியில் நிகழ ஏதுவாகின்றது. புவி மேற் பரப்பில் சராசரி வளி மண்டல அழுத்தம் 8.5 Km வரை 101.325 Kpa ஆகக் காணப்படுகின்றது. பூமியில் தாவர வளர்ச்சிக்கு ஏதுவான சூரிய ஒளி மூலம் நிகழும் பச்சை வீடு விளைவு எனும் ஒளிப்பெருக்கம் 2.7 பில்லியம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது வளி மண்டலத்தில் காணப்படும் வாயுக்களின் வீதத்தைப் பார்த்தால் அதிகளவாக நைட்ரஜன் 78% வீதமும் ஆக்ஸிஜன் 21% வீதமும் மிகச்சிறியளவில் நீராவி மற்றும் காபனீரொட்சைட்டு வாயுக்களும் காணப்படுகின்றன.

ஆயுள் காக்கும் அட்ரீனல் சுரப்பி! கவனம் தேவை!!



சோர்வாக இருப்பது போன்ற உணர்வு. வேலை செய்ய விருப்பமின்மை, எதிர்பாராத சமயங்களில் அடிக்கடி வாந்தி என அல்லல்படுகிறீர்களா? தோல் வறண்டு நிறம் மாற்றம் ஏற்படுகிறதா? ரத்த ஓட்டம் குறைந்து உடல் வலிமையற்ற நிலையை உணர்கிறீர்களா? நிச்சயம் நீங்கள் மருத்துவரை நாடவேண்டும். உங்களின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் அட்ரீனலின் சுரப்பியில் ஏற்பட்டுள்ள பாதிப்புதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

அடிஸன் நோய்

அட்ரினலின் சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் சுரப்புத் தன்மை குறைவதால் இப்பிரச்சினை ஏற்படுகிறது என்று அடிஸன் என்பவர் தெரிவித்த காரணத்தல், இதற்கு `அடிஸன் நோய்' என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது.

ஆயுள் காப்பான்கள்

சிறுநீரகத்தின் மேலே காணப்படும் இரண்டு சிறிய நாளமில்லா சுரப்பிகள்தான் அட்ரீனலின். உடலின் நீர்ச் சத்து, உயிர்ச் சத்துகளைப் பராமரிப்பது, ரத்த அழுத்தம்- ரத்தக் குழாய்களைப் பராமரிக்கும் பணியை இவை கருவறையிலிருந்து கல்லறை வரை செய்கின்றன. இந்த முக்கியப் பணிகளை அட்ரீனல் சுரப்பிகள் செய்வதால் இவற்றை ஆயுள் காப்பான்கள் என்றும் அழைக்கின்றனர். தேவைப்படும் நேரத்தில் மனிதனின் இதய வேகத்தை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை அட்ரீனல் சுரப்பிகள். மேலும் அட்ரீனல் சுரப்பிகள் சுரக்கும் நீர்கள்தான் ரத்த அழுத்தம், ரத்தக் குழாய் பராமரிப்பு உள்பட உடலில் பல விஷயங்களின் கட்டுப்பாட்டு அறைகளாக விளங்குகின்றன.

ஆண்களை பாதிக்கும்

அட்ரீனல் சுரப்பியில் குறைபாடு ஏற்படுவதால் நோயாளிகளுக்குப் பலவீனம், தோல் வறண்டு போதல், சோர்வு முதலியவை உண்டாகும். பிறகு சிறிது சிறிதாக அது திகரித்துக்கொண்டே போகும். உற்சாகம் குறையும். வளர்ச்சி இல்லாமல் மெலிந்துவிடுவார். தசைகள் ஒடுங்கிவிடும். கையில் `ஜில்'லென்று ஆகிவிடும். தோல் நோய்கள், அரிப்புகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இது ஆண்களைத்தான் பெரும்பாலும் பாதிக்கும். அடிஸன் நோய் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

மன அழுத்தம்

அட்ரீனலின் சுரப்பு குறைபாடினால் நீண்டகால மன அழுத்தம் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு அட்ரீனலின் சுரப்பு குறைபாடு ஏற்பட்டால் அது பிறக்கும் குழந்தையை பாதிக்கும். இதனால் அலர்ஜி, ஆஸ்துமா, ஆட்டிசம் போன்ற குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு ஏற்படும்

அட்ரீனல் சுரப்பி கோளாறு காரணமாக உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இருதயத்திற்கு இரத்தத்தை விநியோகிக்கும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த நாளங்களில் கல்சியம் உப்பு மற்றும் இரத்தக் கொழுப்பு படிப்படியாகப் படிந்து அதன் விட்டத்தைக் குறைக்கும். அட்ரீனல் சுரப்பி சுரக்கும் அட்ரீனாலினலானது இரத்தக் குழாய்களில் படிந்துள்ள படிவத்தை உடைத்து எடுத்து இரத்தத்துடன் கலக்கச் செய்யும். இவ்வாறு இடம்பெயர்ந்த படிவம், இருதயத்திலுள்ள மிகக் குறுகிய ரத்த நாளங்களுக்குள் புகும்போது அதை அடைத்து இரத்த ஓட்டத்தை தடுத்து மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கும். இந்த சுரப்பு அதிகாலை மூன்று மணியளவில்தான் அதிகமாகக் சுரக்கப்படும். இதனால்தான் அதிகமான மாரடைப்பு அதிகாலையில் ஏற்படுகிறது.

மன உளைச்சல்

மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் அறிகுறியாக சில நாட்களுக்கு முன்பிருந்தே ஏதாவது கடினமான வேலைகள் செய்யும்போது ஒரு மெல்லிய வலி நெஞ்சின் மத்தி யில் ஏற்படும். அளவிற்கு மீறி உணவு உண்டபோதும், இவ்வலி ஏற்படும். உணர்ச்சிவசப்படும் போதும் மன உளைச்சல் அதிகரிக்கும்போதும் பயம், கோபம், ஏமாற்றம் ஏற்படும் போதும் இவ்வலி ஏற்படும். மேற் படி உணர்ச்சி வசப்பட்ட நிலையில் முன்குறிப்பிட்ட அட்ரீனல் சுரப்பி Catecholamine கேட்டகோலமைன் என்ற சுரப்பை அதி கமாக சுரப்பதால் இருதயம் விரை வாகத் துடிப்பதால் மார்பு வலி ஏற்ப டும். இவ்வாறாக ஏற்படும் மார்பு வலியை அலட்சியம் செய்யாது தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் மாரடைப்பு ஏற்படாது தடுக்கலாம்.

மருத்துவர் ஆலோசனை

ஆரம்ப நிலையாக இருந்தால், சாதாரணமாக உணவில் உப்பைக் குறைத்துச் சாப்பிட்டாலே போதும். விரைவில் குணம் ஏற்பட்டுவிடும். டாக்டர் நிர்ணயிக்கும் அளவில் கார்ட்டிசோன் மாத்திரைகளை உட்கொண்டாலே போதும். ஆனால் சோர்வடையும் அனைவருமே தங்களுக்கு அடிஸன் நோய் ஏற்பட்டிருப்பதாகக் கருதக் கூடாது. இது ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியது. எனவே மருத்துவரை நாடாமல் நோயை முடிவு செய்துவிடக் கூடாது என்றும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

முதுகு வலி... தப்பிக்க என்ன வழி?---மருத்துவ டிப்ஸ்



''இன்றைய வாழ்க்கைச் சூழலில், முதுகு இருக்கும் அனைவருக்குமே முதுகு வலியும் இருக்கிறது!

''உடல் ரீதியாக முதுகு வலி எப்படி உருவாகிறது?''

''சிறு சிறு கண்ணிகள் போன்ற அமைப்புடன் கூடிய 33 எலும்புகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிய நிலையில் வலுவாகப் பிணைத்துவைக்கப்பட்டதுதான் 'முதுகெலும்புத் தொடர்’. இதில், எலும்புகளுக்கு இடையில் உராய்வைத் தடுக்கும் விதமாக டிஸ்க் எனப்படும் ஜெல்லி போன்ற மிருதுவான பாகங்கள் உள்ளன. இரு சக்கர வாகனங்களில் அதிர்வுகளைத் தாங்குவதற்குப் பயன்படும் 'ஷாக் அப்சர்வர்’ போன்ற அமைப்பு இது.

துளையுடனான முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றன தண்டுவட நரம்புகள். உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்வது இந்தத் தண்டுவட நரம்புகள்தான். முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும். இதைத்தான் முதுகு வலி என்கிறோம்.''

''முதுகு வலி வருவதற்கான காரணங்கள்..:
''உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதுதான் பலருக்கும் முதுகு வலி வருவதற்கான முக்கியக் காரணம். வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தே இருக்கக்கூடிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள 'டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி வரும்.''

''எலும்புகளில் தோன்றும் பிரச்னைகள் ?''

''எலும்பின் உறுதித்தன்மைக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியத்தின் பங்கு முக்கியமானது. 20 வயது இளைஞனின் எலும்பில் கால்சியத்தின் அளவு அதிகமாக இருப்பதால், எலும்புகளும் வலுவாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது இந்த கால்சியத்தின் அளவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து எலும்பு மெலிந்து, மிருதுத்தன்மையை அடைந்துவிடும். இதை 'எலும்பு மெலிதல்’ (Osteoporosis) என்கிறோம். நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் 'வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில் தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணி நேரமாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வது நல்லது!''

''முதுகு வலித் தொல்லையில் இருந்து விடுபட, கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் போதுமா?''

'பாலில் கால்சியம் சத்து உண்டு. எலும்பின் ஆரோக்கியத்துக்கு இது நல்லது’ என்று நினைத்து நிறைய பேர் பால் குடிக்கிறார்கள். ஆனால், பாலில் உள்ள கால்சியத்தைப் பிரித்தெடுக்கும் ரெனின் என்சைம் (Rennin Enzyme) குழந்தைகளின் (குறிப்பிட்ட வயது வரை) உடலில் மட்டுமே சுரக்கிறது. பெரியவர்களுக்கு இந்த வகை என்சைம்கள் இயற்கையாகவே உடலில் சுரப்பது இல்லை. எனவே, எவ்வளவுதான் பால் குடித்தாலும் அதில் இருக்கும் கால்சியம் எலும்புகளுக்கு கிடைக்காது.

அடுத்ததாக, கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் பாஸ்ஃபோரிக் அமிலம் (Phosphoric Acid)சேர்ப்பார்கள். இது உடலில் கால்சியம் சத்து உறிஞ்சப்படுவதைத் தடை செய்யும். எனவே, இதுபோன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும்!''

''எலும்பின் ஆரோக்கியம் காக்க எந்த வகை உடற்பயிற்சிகள் செய்யலாம்?''
''நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது!''

news courtesy: டாக்டர் ரவி சுப்பிரமணியம்.
(ஆர்த்ராஸ்கோப்பிக் அறுவைச் சிகிச்சையாளர்)

Thursday, March 1, 2012

அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி:



அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி:
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
இராமம்பாளையம்,காரமடை ஒன்றியம்
மேட்டுப்பாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்.
பள்ளி பற்றிய தகவல்கள்:

1. அமைதியான கிராமச் சூழல்.
2. போதுமான கட்டட வசதி.
3. சார்வதேச தரத்திற்கு இணையான மாதிரி வகுப்பறை.
4. கணினி பயிற்சி வகுப்புகள்.
5. ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள்.
6. பயிற்சி பெற்ற ஆசிரியரால் நடத்தப்படும் யோகா பயிற்சிகள்.
7. ஓவியப் பயிற்சி வகுப்புகள்.
8. விளையாட்டு பயிற்சி வகுப்புகள்.
9. தலைமைத்துவப் பயிற்சி.
10. தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் வாசிப்புப் பயிற்சிகள்.
11. மாணாக்கர் பராமரிக்கும் சிறப்பு பதிவேடுகள்.
12. மாணவ -மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள்.
13. வண்ணச் சீருடைகள் கழுத்தணி ( Tie) காலணி (Shoe), அரைக்கச்சை (Belt), அடையாள அட்டை (ID card), ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு (Dairy). (அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது).

மாதிரி வகுப்பறை (Model Classroom)

1. மாணவார்கள் குழுவாக அமர்ந்து கற்க வட்ட மேசைகள்.
2. புத்தகங்கள் வைக்க இடவசதியுடன் கூடிய நாற்காலிகள்.
3. தமிழ் - ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.
4. DVD - கள் அடங்கிய Digital நூலகம்.
5. கணினி.
6. தொலைக்காட்சி.
7. DVDPlayer.
8. அறிவியல் ஆய்வு உபகரணங்கள்.
9. கணித உபகரணங்கள்.
10. செயல்வழி கற்றல் அட்டைகள் வைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்.
11 சிறந்த ஒளி-ஒலி அமைப்புகள்.
12. மாணவர்கள் எழுதுவதற்கு கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை.
13. படைப்பாற்றலை ஊக்குவிக்க காட்சிப்பலகை.
14. சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி.
15. காற்றுமாசுகளைத் தடுக்க கண்ணாடி சன்னல்கள்.
16. குழந்தைகளைக் கவரும் சுவர் ஓவியங்கள்.
17. உயர் தர தள அமைப்பு.
18. ஒலி பெருக்கியுடன் கூடிய உட்கூரை.
19. வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்.
20. அவசரகாலவழி தீயணைப்புக் கருவி முதலுதவிப் பெட்டி

இப்பள்ளியின் தலைமையாசிரியை ,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ செல்வங்களை மனதார பாராட்டலாம்.

நன்றி: கல்விச்சோலை
I love Tamilnadu