நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Tuesday, February 28, 2012

மாணவனின் குரூரம்...கொலை செய்யப்பட்ட ஆசிரியை...! ஒரு அலசல்...!


பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் என அனைவரையும் மனம் பதற செய்த ஒரு சம்பவம் சமீபத்தில் சென்னையில் நடந்த ஆசிரியை கொலை ! 15 வயது மாணவன் கத்தியை தூக்கினான், கொலை செய்தான் என்பதை ஒரு செய்தி என்றமட்டில் கடந்து செல்ல இயலவில்லை. இதுகுறித்த பலரின் கருத்துக்கள்,  ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்...அதில் சில

* சினிமா , டிவி தான் காரணம்\

* பெற்றோர்களே காரணம்.

*கல்வி நிலையங்கள் பணம் பறிப்பதில் மட்டும் குறியாக இருக்கின்றன...ஒழுக்கத்தை கற்று கொடுப்பதில்லை...?!

* ஆசிரியர்களின் அதிக கண்டிப்பு, பொறுப்பற்றத்தன்மை.

இந்த சிறுவனின் இத்தகைய கொலை பாதக செயலுக்கு இங்கே குறிப்பிட பட்ட மூன்று காரணங்களும் சரிதானா?!!

மாணவனை குறித்த ஒரு பார்வை

ஆசிரியையை கிட்டத்தட்ட 14 இடங்களில் கத்தியால் குத்தியிருக்கிறான் ! எத்தகைய வன்மம் மனதை ஆக்கிரமித்து இருந்தால் இவ்வாறு மாறி மாறி தனது ஆத்திரம் தீரும் வரை குத்தியிருப்பான். சிறு அடியோ ரத்தமோ பார்த்தால் மனம் பதறகூடிய வயதில் ஆசிரியையின் உடலில் இருந்து ரத்தம் கொப்பளித்து வந்ததை பார்த்தும், அவர்கள் அலறி துடித்ததை கண்டும் சிறிதும் தயக்கமோ பயமோ இன்றி தொடர்ந்து குத்திக்கொண்டு இருந்திருக்கிறான். நிச்சயமாக ஒரு நாளில் ஏற்பட்டதாக இருந்திருக்க முடியாது. பல நாட்களாக மனதிற்குள் சிந்தித்து இருக்கிறான், இரண்டு நாட்களாக கத்தியுடன் வகுப்பிற்கு வந்திருக்கிறான். சந்தர்ப்பம் கிடைத்ததும் முடித்துவிட்டான்.ஒருவகையில்  திட்டமிட்ட கொலை !!

சினிமாவே காரணம்

கொலை செய்ய காரணம் தான் அடிக்கடிப் பார்க்கும் வன்முறை காட்சிகள் நிறைந்த தமிழ், ஆங்கிலப் படங்கள் காரணம் அதிலும் 'அக்கினிபத்' படத்தில் ஹீரோ வில்லனை கத்தியால் நெற்றியில் குத்தும் காட்சி தனது நெஞ்சில் ஆழமாக பதிவானது எனவும் கூறியிருக்கிறான்.

இவன் கூறுவதை வைத்துப் பார்க்கும் போது, தனது ஆத்திரத்தை கோபத்தை எவ்வாறு தீர்த்து கொள்ளலாம் என சினிமா வழி காட்டி இருக்கிறது அவ்வளவு தான். ஆனால் இதை வைத்தே சினிமாதான் கொலைக்கே காரணம் என்பது சரியா?!

சினிமா காரணம் என்பதும் அந்த கத்தியை தயாரித்தவன் தான் கொலைக்கு காரணம் என்பதும் ஒன்றுதான். அந்த சினிமாவால் பாதிப்பு என்றால் படம்  பார்த்த அனைவருமே கொலையாளிகளாக மாறியிருப்பார்களே ?! காந்தி படம் பார்த்த அனைவரும் மகாத்மாவாக மாறியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ?! ஆனால் மனம் என்பதன் இயல்பே எதிர்மறைதான். எதிர்மறை எங்கு இருப்பினும் அதைக்கவனிக்கும். உள்வாங்கி வைத்துக்கொள்ளும். ஆனால் ஆக்கபூர்வமானதை புறந்தள்ளும் என்ற நிதர்சனமான உண்மையினை கவனத்தில் கொள்ளவும்.

இந்த ஆசிரியை என்றில்லை இவனது கோபத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவுதான் எடுப்பான். சொல்லபோனால் இவனை கிண்டல் செய்த சக மாணவர்களும் இதற்கு இலக்காயிருக்கலாம். நல்லவேளை இவனிடம் கத்திக்கு பதில் துப்பாக்கி இல்லை

ஆசிரியை கண்டிப்பது தவறு

ஒரு சாராரின் கருத்து என்னவென்றால் அந்த ஆசிரியையின் அதீத கண்டிப்பு ! தன் மாணவர்களின் படிப்பின் மீது எவ்வளவு அக்கறை இருந்தால் பாடத்தில் வீக்காக இருக்கும் ஏழு பேரை தனியாக வரச்சொல்லி வகுப்பு எடுத்திருப்பார். சரியாக படிக்கவில்லை என்றால் பெயிலாகி விடுவாய் என்று ஆசிரியர்கள் சொல்வது சகஜம். அப்படி சொன்னாலாவது அக்கறைகொண்டு படிப்பான் என்ற விதத்தில் தான்.

ஒருமாணவன் படித்து தேர்ச்சி பெறவேண்டும் என்ற இயல்பான அக்கறையில் கொடுக்கப்படும் கண்டிப்பை குற்றம் சொல்வது எந்தவிதத்தில் நியாயம் ?

இந்த சம்பவத்தால் நம் ஆசிரியர்களின் மனம் பாதிக்கபடக் கூடும்.  யார் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன பாடத்தை நடத்துவதுடன் எங்கள் வேலை முடிந்தது என நம் ஆசிரியர்கள் யோசிக்க தொடங்கிவிடுவார்களோ என அஞ்சுகிறேன். அப்படி யோசிக்க மாட்டார்கள் என நம்புவோம்.

பெற்றோர்களின் பேச்சை கேட்காத பிள்ளைகள் கூட அவர்களின் ஆசிரியர்களின் கண்டிப்புடன் கூடிய வழிகாட்டுதலால் நன்கு படிக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

அப்படி இருக்கும் போது மாணவன் செய்யும் தவறுக்கு /குற்றங்களுக்கு ஆசிரியர்களையும், பள்ளிகளையும் குறை சொல்லி கொண்டிருப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களை பற்றியும் மக்களின் மனதில் தவறான எண்ணத்தை விதைத்துவிட கூடிய ஆபத்து இருக்கிறது. இது நல்லதுக்கு இல்லை.

பள்ளிகள் என்னதான் செய்யும் ?

வகுப்பில் ஒரு பீரியட் நேரத்தில் பாடத்தை நடத்தவும், கேள்விகள் கேட்டு சந்தேகங்கள் தெளிவு படுத்தவும் நேரம் சரியாக இருக்கும். இதில் வகுப்பில் இருக்கும் 40,50 மாணவர்களை ஒவ்வொருவராக ஆயுதங்கள் வைத்திருக்கின்றனரா என உற்று கவனிப்பது முடிகிற காரியமா?

குடும்பத்தில் இருக்கும் ஒரு பிள்ளையின் நடவடிக்கையை கவனிக்க முடியாத பெற்றோர்கள் தான் இத்தகைய வினாவை எழுப்புகிறார்கள் என்பது எனக்கு கூடுதல் ஆச்சர்யம் !?

 ஒரு மாணவனின் பெற்றோரின் குணாதிசியங்கள், வளரும் விதம், சுற்றுப் புறச்சூழல்கள், மரபு, புறவிசை தாக்கம் இன்னும் பிற. இவ்வளவும் சரியாக இருந்தால்தான் பள்ளிகள் விதைப்பவை பலமுள்ளதாக மாறும். இவைகளில் ஏதாவது முரண்பாடுகள், கோளாறுகள் இருப்பின் பள்ளியும் ஆசிரியர்களும் எவ்வளவுதான் நல்லதை போதித்தாலும் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்தான். பள்ளிகளை குறை கூறுபவர்கள் இதனை புரிந்து கொள்ளவேண்டும், தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும்.

இன்றைய கல்வி

கல்வி முறையில் இருக்கும் பல குளறுபாடுகள் நம் மாணவர்களை மிகுந்த சோர்வடைய செய்கிறது...10 , 12 ஆம் வகுப்பு மாணவர்கள் படும் பாடுகள் சொல்லி முடியாது...அதுவும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தை பிப்ரவரிக்கு முன்பே முடித்து தேர்வு வைத்து விட்டு பத்தாம் வகுப்பு பாடத்தை எடுக்க தொடங்கிவிடுகிறார்கள்...கோடைவிடுமுறை கிடையாது. எதற்கு இத்தகைய போராட்டம்...?! புத்தகத்தை மட்டும் மனபாடம் செய்து அப்படியே வெளிக்கொணரும் கல்வி முறை மாற்றி அமைக்கப்படவேண்டும். ஒரு இறுக்கமான சூழல் மாணவர்களிடையே நிலவுகிறது, சுதந்திரமாக படிக்கும் வாய்ப்பு கொடுக்க படவேண்டும்...அதிகரிக்கும் மாணவர்களின் மனஉளைச்சல், மன அழுத்தம் போன்றவற்றை பற்றி அரசு கல்வித்துறை அக்கறை கொள்ளவேண்டும்.

இன்றைய பெற்றோர்கள்

நேற்றைய குழந்தைகள் நாம் என்பதை மறந்து விடுகிறோம்...தான் கற்காத கல்வியை தனது பிள்ளை கற்க வேண்டும் என்பதில் முடிந்துவிடுகிறது ஒரு குழந்தையின் எதிர்காலம்.

எதிலும் தனது குழந்தை முதன்மையாக வர வேண்டும் என ஆசை படுவதில்  தவறில்லை, அதற்காக பெரும் சுமையை வைப்பதுபோல் எப்போது படி...படி என வற்புறுத்தி கொண்டே இருப்பது மன அழுத்தத்தை கொடுத்து விடும். ஒன்றிரண்டு மதிப்பெண்கள் குறைந்து விட்டாலும், வாழ்க்கையே தொலைந்து விட்டது என்று பெற்றோர் கொள்ளும் பதற்றம் அப்படியே அவர்களது பிள்ளைகளையும் தொற்றிக்கொள்கிறது.

இன்றைக்கு பெரும்பாலான வீட்டில் ஒரு குழந்தைதான். ஒரே குழந்தை ஆடவும் செய்யணும், பாடவும் செய்யணும், படிக்கவும் செய்யணும், விளையாட்டிலும் இசையிலும் தேர்ச்சி பெறணும் என்பதெல்லாம் மிக அதிகபடியான எதிர்பார்ப்புகள்.

இங்கே சம்பந்தப்பட்ட மாணவன், மூன்று பெண்பிள்ளைகளுக்கு நடுவில் ஒரே ஆண் , நம் சமூகத்து வழக்கப்படி(?) ஒட்டு மொத்த குடும்பமே போட்டி போட்டு செல்லம் கொடுத்திருக்கிறது...தனி அறை, டிவி, கம்பியூட்டர், செலவுக்கு பணம் இப்படி வளர்க்கப்பட்டவனுக்கு , பள்ளியில் ஆசிரியையின் கண்டிப்பு வெறுப்பை ஏற்படுத்துவதில் ஆச்சர்யம் இல்லையே ?!!

குழந்தையுடன் நேரத்தை செலவு செய்ய முடியாத பெற்றோர்கள் தங்களது குற்றத்தை மறைக்க குழந்தைகள் கேட்டதை உடனே  வாங்கிகொடுத்து பழக்கி  விடுகிறார்கள்...வெளி உலகத்தில் தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்றபோது எதிர்க்க தொடங்குகிறார்கள்...!

இன்றைய குழந்தைகள் என்ன தவறு செய்தாலும் பெற்றோர்கள் உடனே சுட்டி காட்டபடுவது சினிமா டிவியை தான்...! இந்த சினிமா, டிவியை குழந்தைகளிடம் முதலில் அறிமுகம் செய்வது யார் ? இவை இரண்டும் சரியான வழியை காட்டவில்லை என்றால் அவற்றை ஏன் பிள்ளைகளிடம் அறிமுகம் செய்கிறீர்கள்...?! வீட்டில் இருக்கும் டிவியை எடுத்துவிடுங்கள்...சினிமாவிற்கு போவதற்கு எவ்வாறு முடியும், நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்றால்...ஒரு பதினைந்து வயது பிள்ளையிடம் பணம் எப்படி வருகிறது பெற்றோர்கள் கொடுக்காமல்...

குழந்தைகள் மனம் பாதிக்கபடுவதற்கு சினிமா, டிவி ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல. பெற்றோர் இடையே நடக்கும் கருத்துவேறுபாடு சண்டைகள் ! அவர்கள் இடையே நடக்கும் அடி உதையும் வன்முறைதான். அப்போது பேசப்படும் அவதூறான பேச்சுக்கள் கூட குழந்தைகள் வயதிற்கு ஆபாசம் தான்...!

என்னதான் தீர்வு?!

விருப்பம் போல் விளையாட அனுமதியுங்கள்...படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை முதலில் உணரவேண்டும், அது வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே.  ஒழுக்கம், பண்பாடு,விருந்தோம்பல், நன்னடத்தை, பெரியோரை மதித்தல், இப்படி நல்ல விசயங்களை கற்றுகொடுக்க வேண்டிய முக்கிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது...குழந்தைகளுடன் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள்...! அவர்களுக்காக வாழ்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பது முக்கியம் அல்ல அருகில் உடலாலும், தூரத்தில் உணர்வுகளாலும் உங்கள் குழந்தையை  தொட்டு கொண்டே  வாழுங்கள்...!!
மேலும் பள்ளிகள், அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இப்படி எல்லா இடத்திலும் இருக்கும் குறைகள் சீர் செய்யப்படவேண்டும்...இன்றைய மாணவர்களின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு காரணம் அவர்கள் மட்டும் அல்ல என்பதை அழுத்தமாக கூறி இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

கழுகிற்காக
கெளசல்யா

அடிப்படை கல்வி--இன்றைய நிலை...ஒரு விழிப்புணர்வு பார்வை!



அன்பர்களே ....

நம் இந்திய திரு நாட்டின் பண்டைய கல்வி முறை  குருகுலத்தை சார்ந்து இருந்தது... மாணவர்கள் குருவின் வீட்டிலேயே தங்கி படித்துவந்தார்கள்...

பின்னர் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் நம் கல்வி முறையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி தற்போது இருக்கும் மெக்காலே  முறைக்கு---முற்றிலுமாக நம்மை மாற்றி அதற்கு நம்மையும் அடிமை ஆக்கிவிட்டார்கள்.....

இப்போது எல்லாம் மதிப்பெண்,,மதிப்பெண்,...மதிப்பெண்.....

செயல் வழி கற்றல் என்று ஆரம்பித்தார்கள்....அது எந்த அளவுக்கு தற்போது செயல்பாட்டில் உள்ளது ..????

அன்பர்களே..பொதுவா நம் எல்லாருடைய எண்ணமும்... நமது குழந்தைகள்...மதிப்பெண் நிறைய வாங்கவேண்டும்.. வகுப்பில் முதலாவதாக வரவேண்டும்...இது மட்டும் தான்.

நம்மில் எத்தனைபேர்...விடைத்தாளில்...வாந்தி எடுப்பதை.. ஒத்துக்கொள்கிறீர்கள்???
இது எல்லாம் சுத்த வேஸ்ட் ... பாட பகுதியை மனனம் செய்து அதை அப்படியே விடைத்தாளில்  கக்குவதற்கு எதற்கு...பள்ளி...??? பள்ளி கட்டணம்..??? படிப்பவை கடைசி வரை நினைவில் நிற்குமா ??? இதை நாம் வீட்டிலேயே செய்ய சொல்லலாம்...

இன்றைய..பாடத்திட்டம் அந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.. இனி இந்த நிலை மாறினாலும் நாம் மதிப்பெண் எங்கே...என்றுதான் கேட்போமே தவிர நம் குழந்தைகளின் தனிப்பட்ட திறமையை எங்காவது ஊக்குவித்துலள்ளோமா??? உலகிலேயே எல்லா கல்வியாளர்களாளும் பெரிதும் பாராட்டப்படும்  NCRT-கல்வி முறைக்கு நம்மில் எத்தனை பேர் ஆதரவு தெரிவிக்கிறோம் ???   

அடிப்படை கல்வி முழுமை அடைந்தால் அந்த மாணவன் எதிர்காலத்தில் மிக அருமையாக மிளிர்வான்... அதை எந்த கல்வி நிறுவனம் முழுமையாக...சுயநலம் இல்லமால் செய்கிறது??எல்லாம் பணம்..பணம்..பணம்... இன்றைய கால கட்டத்தில் இத்தனை "கல்வி தந்தைகள்"  உருவாக நாம் எல்லாருமே காரணம்...

நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிதரும்போது கூட--இந்த கேள்வியை படி.. இதற்க்கு பதில் சொல்லு...இப்படிதான் படிக்க வைக்கிறோம். நம்மில் எத்துனை பேர்.நம் குழந்தைகளுக்கு வாழ்க்கை கல்வியை போதிக்கிறோம் ...???

அனுபவரீதியான பாடங்கள் மற்றும் சுய படைப்பாற்றல் ( SELF CREATIVITY ) எத்தனை குழந்தைகளுக்கு கிடைக்கிறது??? நன்மை கேட்டால்--வகுப்பு பாடம் என்பது நம் குழந்தைகளை அறிவு மழுங்க செய்துவிடும் என்பது திண்ணம்.. வகுப்புடன் கூடிய,,அனுபவரீதியான பாடம் ,,குரூப் டிஸ்கஷன்,, சுய படைப்பாற்றல்,,விளையாட்டு,,விளையாட்டின் முலம் பாடம்,, இப்படி முயற்சி செய்தால் எதிர் கால சந்ததியினர்..எல்லா துறையிலும்.. மற்றும் உலகத்தினறோடு போட்டி போட முடியும்...

எனவே நண்பர்களே..நாம் தான்--நம் குழந்தையின் எதிர்காலம் பற்றி  கவலை படுபவர்கள்...அவர்களின் நாள் வாழ்வுக்காக நாம் நம்மை அர்ப்பணிப்போம்...

அவர்களின் பாடதிட்டத்தில்...நம்மை ஈடுபடுத்திக்கொண்டு ...அவர்களுக்கு அனுபவம் சார்ந்த,,ஊக்குவிப்பு சார்ந்த,,,மனனம் இல்லாத.. படித்தலை ஒரு சுவையான அனுபவமாக கொண்டு செல்லுங்கள்...

இந்த முறையில் உங்களால் முடிந்த அளவுக்கு உங்கள் குழந்தைகளை பயிற்றுவித்தால் நிச்சயம் உங்கள் குழந்தைகள்...எதிர்காலத்தில் பேர் சொல்லும் அளவுக்கு வளருவார்கள்...

அடுத்து
போட்டி தேர்வுக்கான டிப்ஸ் :-

அன்பர்களே பொதுவாக நாம் போட்டி தேர்வுக்கு,,மற்றும் பள்ளி தேர்வுக்கு  படிக்கும்போது கேள்வி--அதற்கு நான்கு பதில்கள்...அதில் சரியானவற்றை தேர்ந்தெடுப்பது ...இது தான் நடை முறை...இதை ஒரு உதாரணம் முலம்  பார்ப்போம்...

காகசஸ் மலை---

1. திபெத்திற்கு வடக்கில் உள்ளது.
2. அமெரிக்க ஐக்கிய நாட்டின் மேற்கு பகுதி.
3. கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் உள்ளது.
4. ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் உள்ளது.

இந்த கேவிக்கு விடை என்று பார்த்தால் 3.

அவ்வளவு தானா???
இந்த ஒரு கேள்விக்கு பதில் தெரிந்து விட்டது...
நாம் அடுத்த கேவிக்கு செல்வோம் என்று போய்விடுவீர்கள்....

இந்த கட்டுரையின் நீளம் கருதி சுருங்க பார்ப்போம்....

பொதுவா...கேவிக்கு என்ன பதில் என்று பார்ப்பதைவிட 
பதிலுக்கு கேள்வி தேடுங்கள்...
மேலே உள்ள கேள்வியை எடுத்துக்கொள்ளுங்கள்...

1. திபெத்திற்கு வடக்கில் உள்ளது.

இதற்கு கேள்வி தேடுங்கள்...
திபெத்துக்கு வடக்கில் என்ன உள்ளது...??
மற்ற முன்று திசையிலும் என்ன உள்ளது ???
அது தொடர்பான தகவல்கள் என்ன என்ன ???

இப்ப பாருங்க..ஒரு பதில்...அதற்க்கு உண்டான 
கேள்விகள் பல...
இவற்றை தேடும்போது மறக்குமா???

அதே போல் மற்ற பதில்களுக்கும் கேள்வி தேடுங்கள்...
எவ்வளவு விஷயங்கள் நீங்கள் கற்று கொள்வீர்கள்....

இதை மேலும் இந்த படம் முலம் விளக்குகிறோம்..
இங்கு பொதுவாக நாம் படித்து கொண்டு போவது கீழிருந்து மேலாக... அப்படி போகும்போது
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் படிப்பதும் நினைவில் நிற்காது...அதற்கு மேல் படிக்கவும்
ஆர்வம இருக்காது... 

அதாவது...மரம்,,முக்கிய கிளைகள்--கேள்வி என்று வைத்துக்கொண்டால்,, இலைகள் பதில்கள்... இந்த முறையில் நாம் போட்டி தேர்வுக்கு தயார் ஆகும்போது நாம் பாதிக்கு மேற்பட்ட பாடங்களை விட்டுவிட வாய்ப்பு இருக்கிறது...முழுமையாக படித்து முடித்து...நினைவில் வைத்துக்கொள்வது மிகுந்த சிரமம்...

அதே இந்த முறையில் முயற்சி செய்யுங்கள்...
அதாவது...
இலைகள் முலமாக (விடைகள்)--கேள்விக்கு வாருங்கள்...
நீங்கள் அனைத்து பாடத்தையும் COVER செய்து விடுவீர்கள்....
படம் பார்க்கவும்...

என்ன அன்பர்களே...இந்த டிப்ஸ் பிடித்துள்ளதா...ஆம் எனில் இந்த முறையை நீங்களும் பின்பற்றுங்கள்...அனைவருக்கும்...சொல்லி தாருங்கள்... 


( படம் உதவி--வீடு--சுரேஷ் குமார் )

நன்றி ..கழுகிற்கு

Friday, February 24, 2012

வினை விதைக்கிறோம்


இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியின் தரம், பள்ளிகளின் நிலை, வசதி, மாணவர் சேர்க்கை போன்றவை ஆய்வு செய்யப்படுகின்றன. இத்தகைய "கல்விக் கணக்கெடுப்பு ஆண்டறிக்கை - 2011' அண்மையில் வெளியிடப்பட்டது.
 இந்த அறிக்கையில் தமிழ்நாடு மகிழ்ச்சி கொள்ள இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பள்ளி செல்வது 100 விழுக்காடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர், ஆசிரியர் பள்ளி வருகையும் 90 விழுக்காடுக்கு அதிகமாக உள்ளது. இது ஓர் ஆரோக்கியமான சூழல்.
 அதேவேளையில், அரசும் பெற்றோரும் கவலைகொள்ளக்கூடிய இரண்டு விஷயங்களும் உள்ளன. முதலாவதாக, 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 32 விழுக்காடு மாணவர்களுக்குத்தான் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்துள்ளது. இது 8-ம் வகுப்பில் சற்றே உயர்ந்து 66 விழுக்காடு மாணவர்கள் எளிய தமிழைப் படிக்க இயலுவோராக இருக்கின்றனர்.
 இரண்டாவதாக, 5-ம் வகுப்பில் 45 விழுக்காடு மாணவர்களால் கழித்தல் கணக்கு மட்டுமே செய்ய முடியும். 14 விழுக்காடு மாணவர்களால் மட்டுமே கழித்தல், வகுத்தல் இரண்டையும் செய்ய இயலுகிறது. எட்டாம் வகுப்பில் இந்த நிலை மாறுகிறது. கழித்தல் மட்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 38 விழுக்காடாகவும், கழித்தல், வகுத்தல் இரண்டும் செய்யக்கூடிய மாணவர்கள் 45 விழுக்காடாகவும் உயருகிறது.
 இந்த ஆய்வு ஏதோ அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் கருதிவிட வேண்டியதில்லை. தனியார் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் இந்த ஆய்வு. தனியார் பள்ளிகளில் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தால், சிறப்பாகக் கல்வி பயில வாய்ப்பு ஏற்படும் என்கிற எண்ணத்தில்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், அங்கும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
 ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் 2-ம் வகுப்பு தமிழ்ப்பாட நூலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னபோது, அரசுப் பள்ளி மாணவர்களில் 68 விழுக்காடு மாணவர்கள் திணறினார்கள் என்றால், தனியார் பள்ளிகளில் கொஞ்சம் குறைவு- அதாவது 66 விழுக்காடு!
 8-ம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களில் 15 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றனர் என்றால், தனியார் பள்ளி மாணவர்கள் 25 விழுக்காட்டினர் ட்யூஷன் படிக்கின்றார்கள். தனியார் பள்ளியில் படித்தாலும் நான்கில் ஒருவர் ட்யூஷன் படித்துதான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்றால், தனியார் பள்ளிகளுக்கு கொட்டி அழுது கண்ட பலன் என்ன என்பது பெற்றோர் சிந்திக்க வேண்டிய விஷயம்.
 இந்த ஆய்வில் கிடைக்கும் இன்னொரு தகவல், தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களில் 92 விழுக்காட்டினரின் வீட்டு மொழி, தமிழ் மொழியாக இருக்கின்றது. அப்படி இருந்தும், இவர்களால் தமிழைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், கற்பித்தல் முறையில்தான் தவறு இருக்கிறது என்பது உறுதியாகின்றது.
 ஆங்கில மொழியில் கிராமப்புறப் பள்ளி மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும் பின்தங்கியிருக்கிறார்கள் என்பதாலும், தனியார் பள்ளிகளில்தான் ஆங்கில அறிவு சிறப்பாகக் கிடைக்கும் என்பதாலும்தான் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுகின்றனர். ஆனால், தாய்மொழியான தமிழையே இந்தத் தனியார் பள்ளி மாணவர்களால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை என்றால், இவர்களால் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளவும், படிக்கவும் எழுதவும் எவ்வாறு முடியும்?
 ஒரு மாணவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்காமலேயே கற்றுக்கொள்ளக்கூடிய, மிக இயல்பான கற்றல் சூழல் இப்போது இருக்கின்றது. இன்றைய தமிழ்நாட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடே கிடையாது என்ற நிலைமை உள்ளது. தொலைக்காட்சியில் இடம்பெறும் பெயர்கள், டிவி விளம்பரங்களைக் குழந்தைகள் எழுத்துக்கூட்டி படிக்க முடியும். ஊர் முழுவதும் சுவரொட்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. கடைகளின் விளம்பரங்கள் இரவு நேரத்தில்கூட தமிழிலும் ஆங்கிலத்திலும் மின்னுகின்றன. இதில் நகரம், கிராமம் என்ற எல்லைக்கோடுகள் மறைந்து வருகின்றன. பிறகும் ஏன் மாணவர்களால் எளிய தமிழைப் படிக்கவும், சிறிய கணக்குகளைப் பிழையின்றி கணிக்கவும் முடியவில்லை?
 இந்த ஆய்வு தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 26,000 மாணவர்களிடம் நடத்தப்பட்டது என்றாலும், "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிற அளவில் இந்த ஆய்வின் முடிவுகள் குறித்து, மதிப்பீடு என்கின்ற வகையில் தமிழக அரசு மிகத் தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும்.
 பள்ளி வாராக் குழந்தைகள் இல்லை என்ற நிலையை எட்டி விட்டோம். ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவதும்கூட நன்றாக இருக்கின்றது. ஆனால், கற்றல் மட்டும் இல்லை. கல்வி தரமானதாக இல்லை என்றால், அதற்கு ஒரே காரணம் கல்வித்துறையின் கற்பித்தல் முறைதான் என்பது வெளிப்படை.
 நமது கல்வி முறையில் இருக்கும் அடிப்படைக் குறைபாடு, ஆசிரியர்கள் மத்தியில் அர்ப்பணிப்பு உணர்வு இல்லாமை. அரை நூற்றாண்டுக்கு முன்னால் அரை வயிற்றுக் கஞ்சியுடன் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வு இன்று அரசு ஊழியர்களாக ஊதியம் பெறும் ஆசிரியர்களிடம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் ஆசிரியர் பணியை சேவையாகக் கருதாமல் ஒரு தொழிலாகக் கருதுவதுதான். மேலும், சமுதாயத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த உன்னதமான இடமும் மரியாதையும் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.
 கல்வித் துறையில் அரசியல் தலையீடு, பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கல்வி என்கிற பெற்றோரின் தவறான அணுகுமுறை, ஆசிரியர்களின் தரம், ஆசிரியர்கள்மீது சமுதாயத்தில், குறிப்பாக, பெற்றோரிடத்தில் காணப்படும் மரியாதையின்மை போன்றவைதான் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 காரணங்கள் தெரிகிறது. அந்தத் தவறுகளைத் திருத்திக் கல்வி முறையை மேம்படுத்தும் எண்ணம் இல்லை என்றால் அது யார் தவறு? நாளைய தலைமுறையைப் பற்றி நாம் கவலைப்படாமல் இருப்பது நமக்கு நாமே குழி பறித்துக் கொண்டிருப்பது என்பதை மறந்துவிட வேண்டாம்! 

செயல்வழிக் கற்றல் தடுமாறும் செயலாக்கம்

கட்டுரை -வே. வசந்திதேவி

நான் மட்டும் ஒரு கவிஞனாக இருந்தால், ஐந்து விரல்களின் அற்புதத்தைப் பற்றிக் கவிதை பாடுவேன்... கைகளின் வழி அறிவுக்குக் கல்வி புகட்ட வேண்டும். தங்கள் கைகளைப் பயிற்றுவிக்காதவர்களின் ... வாழ்வில் இசையில்லை. அவர்களது அனைத்துத் திறமைகளும் வளர்க்கப்படுவதில்லை. வெறும் புத்தக அறிவு குழந்தைக்கு ஆர்வமிக்கதாக இல்லை. வெறும் வார்த்தைகளால் மூளை களைப்படைந்து விடுகிறது; குழந்தையின் கவனம் சிதறத்தொடங்குகிறது ...
- மகாத்மா காந்தி, 1939
குழந்தைகளின் ஆரம்பகாலக் கல்வி, செயல்வழியிலேயே (activity based) நடைபெற வேண்டுமென்பது பல காலமாகக் கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பெரும்பாலான நாடுகளில் வெற்றிகரமாக இயங்கும் அடிப்படைக் கோட்பாடாகும். மான்டிஸோரி முறை போன்ற புகழ்பெற்ற போதனா முறைகள் இந்தக் கோட்பாட்டையே வலியுறுத்துகின்றன. மகாத்மா காந்தி இதற்கும் ஒரு படி மேலே போய், குழந்தைகள் செயல்வழி மட்டுமின்றி, உழைப்புவழிக் கற்க வேண்டுமென்றார். ஆனால் இந்திய அனுபவத்தில், தொலைநோக்குப் பார்வையுடைய சில கல்வியாளர்களின் கனவில் பிறந்த சிறிய மாற்றுப் பள்ளிகளிலேயே செயல்வழிக் கற்றல் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய வகுப்பறைகள் குழந்தைகளுக்கு ஏற்றவையாக இல்லை; போதனா முறைகள் குழந்தைகளை மையமாகக் கொண்டவையல்ல. அதிலும் பெரும்பாலான குழந்தைகள் முதல் தலைமுறையாகக் கல்வி பயிலும் ஏழ்மையில் மூழ்கிய குடும்பத்துக் குழந்தைகள் என்பதால் அவர்களது தனிப்பட்ட தேவைகளையும் அவர்களது மொழி, சமூகப் பொருளாதாரப் பின்னணியை மனத்தில் கொண்டும் உருவாக்கப்பட்ட போதனா முறைகள் தேவை. வகுப்பறைகள் இறுகிப்போன அதிகாரக் கலாச்சாரத்தில் மூழ்கிக்கிடக்கின்றன. ஆசிரியர் அதிகார பீடத்தில் அமர்ந்து பிரம்பைச் சுழற்றும் சர்வாதிகாரியாகவும் மாணவர் கைகட்டி வாய் புதைக்கும் அடிமைகளாகவும் தோற்றமளிக்கின்றனர். மாணவர் என்ற காலிப் பாத்திரத்தில் விவரங்களைக் கொட்டுவதே ஆசிரியரது பணி. இந்த அவல நிலை காரணமாக ஆர்.கே. நாராயணன் நாடாளுமன்றத்தில் சொன்னதைப் போல் புரியாமை என்ற கொடுமை இந்தியக் கல்வி அமைப்பின் சாபக்கேடாக நிலைபெற்றுள்ளது.
அனைத்துக் குழந்தைகளும் திறம்படக் கற்க வேண்டுமென்றால் இரு தளங்களில் உடனடியான ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். போதனா முறை குழந்தையை மையமாகக்கொண்டதாக, குழந்தை ஆர்வத்துடன் கற்று, சுயசிந்தனையும் படைப்பாற்றலும் மிக்க வளர்ச்சிபெற உகந்ததாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, அனைத்துக் குழந்தைகளும் கற்றல் திறன்களை அடைய வேண்டும். அதாவது, போதனா முறை (teaching process), திறனடைதல் (learning outcome) இரண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இன்று இந்தியாவில் குழந்தைகள் கற்றல் திறன்களை அடைவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக நடைபெறும் ASER (Annual Status of Education Report) என்ற தேசிய அளவிலான ஆய்வு, பள்ளிச் சிறார்களின் தாழ்ந்த கற்றல் திறமைகள் குறித்த அதிர்ச்சி அளிக்கும் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கைகளின்படி நாடு முழுவதும் உள்ள ஐந்தாம் வகுப்பு மாணவரில் 59 சதவீதத்தினர்தாம் இரண்டாம் வகுப்பிற்குரிய பாடத்தைத் தங்கள் தாய்மொழியில் வாசிக்கும் திறமை பெற்றவர்கள். தமிழ்நாட்டில் 35 சதவீத மாணவர்தாம் இத்திறமை பெற்றவர்கள். கணிதத்தில் தேசிய அளவில் ஐந்தாம் வகுப்பு மாணவரில் 42 சதவீதத்தினர் மட்டுமே எளிய கழித்தல் கணக்குச் செய்ய இயன்றவர்கள்; தமிழ்நாட்டில் 18 சதவீத மாணவரே இந்தத் திறமை பெற்றவர்கள். கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்று கொண்டாடிக்கொண்ட பெருமை காற்றில் பறந்து விட்டது. தமிழ்நாடு தேசிய சராசரியைவிடவும் தாழ்ந்துகிடக்கிறது.
வேதனைக்கும் வெட்கத்திற்கும் உரிய இத்தகைய நிலை மாறக் கல்வியில் உடனடித் தேவைப்படும் மாற்றங்களில் ஒன்றுதான் செயல்வழிக் கற்றல். இதனை ஒரு மாநிலத்தின் பெரும்பாலான குழந்தைகள் கற்கும் அரசு-பொதுப் பள்ளிகளில் நடைமுறைபடுத்தும் முயற்சி சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் 'நல்லி கல்லி' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஆனால் விரைவில் கைவிடப்பட்டது. இன்று தமிழ்நாட்டின் அனைத்து அரசு-பஞ்சாயத்து, உதவி பெறும் பள்ளிகளில் செயலில் உள்ளது. ஆங்காங்கே சிறிய அளவில் மட்டும் நடந்துகொண்டிருந்த ஒரு சிறந்த கற்றல் முறையை 70 லட்சம் குழந்தைகள் பயனடையும் வண்ணம் பிரம்மிக்கத்தக்க விரிவாக்கம் செய்திருக்கும் தமிழக அரசும் அனைவருக்கும் கல்வி இயக்ககமும் (சர்வ சிக்ஷா அபியான்) பாராட்டுதலுக்கு உரியவை.
செயல்வழிக் கற்றல் தமிழ்நாட்டில் முதலில் சென்னை மாநகரப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டு, பின் ஒன்றியத்திற்கு 10 பள்ளிகளுக்கு எனக் கொண்டு செல்லப்பட்டு, 2007-2008ஆம் ஆண்டில் மாநிலத்தின் அனைத்து அரசு-உதவி பெறும் பள்ளிகளுக்கும் பெரும் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆந்திராவில் புகழ்பெற்ற ரிஷி பள்ளத்தாக்குப் பள்ளியினால் நடத்தப்பெறும் கிராமப்புறப் பள்ளிகள் தமிழகத்திற்கு மாதிரியாகக் கொள்ளப்பட்டன.
இம்முறை சில வகுப்பறை உத்திகள், உபகரணங்கள் மூலம் இயங்குகிறது. ஒன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புவரையிலான மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பாடப் பிரிவிலும் அடைய வேண்டிய திறன்கள் ஒரு ஏணி வடிவில் அமைக்கப்பட்டு, அதில் பல மைல்கற்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஏணியின் ஒவ்வொரு படிக்கும் உரிய பல செயல்முறைகளும் அவற்றிற்கான குறியீடுகளும் (logos) வகுக்கப்பட்டுள்ளன. அதனைப் புரிந்துகொண்ட குழந்தை ஏணியில் படிப்படியாக ஏறிச் செல்கிறது. வகுப்பறையின் நான்கு சுவரிலும் குழந்தைக்கு எட்டும் உயரத்தில் கரும்பலகை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் நான்காம் வகுப்புவரையிலான குழந்தைகள் ஒன்றாகக் கற்கிறார்கள்; பல குழுக்களாகப் பிரிந்து வட்டமாக அமர்ந்து, ஆசிரியரின் துணையுடனோ சக மாணவர் துணையுடனோ தாமாகவோ கற்கிறார்கள். ஆசிரியர் குழந்தைகளுக்குச் சமமாகத் தரையில் அமர்ந்து கற்பிக்கிறார். பாடப் புத்தகத்திற்குப் பதிலாகப் படங்களும் சொற்களும் கொண்ட அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
செயல்வழிக் கற்றல் வகுப்பறைச் சூழலில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொணர்ந்திருக்கிறது. அடக்குமுறையின் வடிவமாக இருந்த வகுப்பறை மறைந்துவிட்டது. இத்தனை நாட்களாகக் குழந்தைகளின் மென்மையான தோள்களின் மீது சுமத்தப்பட்டிருந்த அச்சத்தின் சுமை அகன்றிருக்கிறது. பிரம்பும்கூடக் காணாமல் போய் விட்டது. சலனமற்ற சவத்தன்மை கொண்ட வகுப்பறை, குழந்தைகளின் ஆர்வக் குரல் ஒலிக்கும் உயிரோட்டம் கொண்டதாக மாறியிருக்கிறது. ஆசிரியரின் சர்வாதி காரமும் சட்டாம்பிள்ளைத் தனமும் மறைந்து விட்டன.
கற்றல் என்பது அச்சுறுத்தல், மூச்சுத் திணறவைத்தல், மனப்பாடம் செய்து கொட்டுதல், ஆசிரியரின் பிரம்படிக்கு அடிபணிதல் என்ற புரிதல் மாறி, கற்றல் என்பது குழந்தைகள் பங்கேற்கும் குழந்தைகளை மதிக்கும் இனிய அனுபவம் என்ற புதிய பொருள் பெற்றுள்ளது. குழந்தைகள் அவர்களது இயல்புக்கு மாறாக, நாள் முழுவதும் ஒரு இடத்தில் கட்டிப்போட்டுக் கிடக்கும் நிலை மாறி, சுதந்திரமாக வகுப்பறை முழுதும் நடமாடுகின்றனர். குழந்தைகள் நேசிக்கும் இடமாக வகுப்பறை மாறியிருக்கிறது. கற்றல் அட்டைகள் நிரம்பிய பெட்டிகள், கூரையிலிருந்தும் சுவர்களிலிருந்தும் தொங்கும் குழந்தைகள் வரைந்த படங்கள் என வகுப்பறை வண்ணமயமாக விளங்குகிறது.
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் இருந்த தடுப்புச் சுவர் உடைந்திருக்கிறது. ஆதிக்க பீடமான நாற்காலியிலிருந்து ஆசிரியர்கள் இறங்கிவந்து, தரையில் குழந்தைகளுடன் அமர்ந்திருப்பதே ஒரு ஜனநாயகச் சூழலை உருவாக்கியுள்ளது. காலங்காலமாக வகுப்பறை கட்டிக்காத்துவந்த ஆண்டான்-அடிமை உறவை அடித்து நொறுக்கிவிட்டது. இதுவரை மாணவருக்கு மறுக்கப்பட்ட கரும்பலகை அவர்களுக்குச் சொந்தமாகிவிட்டது. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள சிறிய கரும்பலகை மழலை எழுத்துகளால் நிரம்பிவழிகிறது.
ஒவ்வொரு குழந்தைக்குமான வெளியும் தன் வேகத்தில் முன்னேறுவதற்குமான சுதந்திரமும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை கற்றல் ஏணிப்படியில் குறிக்கப்பட்ட செயல்களைச் செய்து முடிப்பது, தன்னுடைய வேகத்தில் ஏணியில் மேலே ஏறுவது, மைல்கற்களைத் தாண்டிச்செல்வது, ஒவ்வொரு கட்டத்திலும் தான் கற்றுக்கொண்டதை மதிப்பிடுவது எனத் தன்னிலை விளக்கம் பெறுவதும் அதனை ஆசிரியரும் சக மாணவரும் சகஜமாக ஏற்றுக்கொள்வதும் வியப்பிற்குரிய மாற்றங்களாகும். மேற்கண்ட மாற்றங்களின் விளைவாகக் குழந்தை தன் சக்தியை உணர்கிறாள். உயிர்த்துடிப்புள்ள, மகிழ்ச்சியான இடமாக வகுப்பறை உருவெடுத்துள்ளது.
செயல்வழிக் கற்றல் பற்றி ஆய்வு மேற்கொண்ட எங்கள் குழு தமிழ்நாட்டின் ஆரம்பக் கல்விக்கு இம்முறை ஒரு வரப்பிரசாதம் என்று கருதுகிறது. பழைய முறைக்கு மாறிப்போய்விடா வண்ணம் இது கட்டிக் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. அரசின் நிதி நிலை, அரசியல் நிர்ப்பந்தங்கள், அதிகாரிகள் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றிற்குச் செயல்வழிக் கற்றல் பலியாகிவிடக் கூடாது. எங்கள் வலிமையான முதல் பரிந்துரை செயல்வழிக் கற்றல் தொடர வேண்டும்; வலிமைப்படுத்தப்பட வேண்டும்; பழமைக்குச் சரிந்து விடாமல் காப்பாற்றப்பட வேண்டும். செயல்வழிக் கற்றல் மேலும் உயிரோட்டம் உள்ளதாகவும் குழந்தைகளுக்குக் கூடுதல் பயனுள்ளதாகவும் சிக்கல் குறைந்ததாகவும் மாற்றப்பட வேண்டும். இதனை மனத்தில் கொண்டு அறிக்கை பல பரிந்துரைகளை அளித்துள்ளது. மிகவும் முக்கியமானவை மட்டும் இங்கு அளிக்கப்படுகின்றன.
பிரச்சினைகளும் பரிந்துரைகளும்
செயல்வழிக் கற்றல் மாற்றுப் பள்ளிகளில் சிறிய அளவில், சிறு எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு, தீவிரக் கண்காணிப்புடன், அதன் தத்துவார்த்த அடிப் படைகளைப் புரிந்து உள்வாங்கிய, அர்ப்பணங்கொண்ட, பல கட்டப் பயிற்சிபெற்ற ஆசிரியராலேயே வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதனை ஒரு மாநிலம் முழுதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு, குறுகிய காலத்திற்குள் விரிவுபடுத்துவது பெரும் சவாலுக்குரியது. சர்வ சிக்ஷா அபியானின் தலைமை கண்ட கனவு, மாநிலத்தில் பரந்து கிடக்கும் லட்சக்கணக்கான மாணவர்களைச் சென்றடைவதற்குள் ஏற்படும் சிதைவுகளும் திரிபுகளும் இழப்புகளும் ஏராளம்.
அத்துடன், மாநிலத்தின் பள்ளிக் கல்வியில் ஏற்கனெவே இருக்கும் பெரும் பிரச்சினைகளைத் தொடாமல் இந்தப் புரட்சிகரத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது பிரச்சினையின் ஆழத்தை அதிகரித்துள்ளது.
இத்தகைய முன்கூட்டிய பிரச்சினைகளில் மிக முக்கியமானது ஆசிரியர் பற்றாக்குறை. இன்று செயல் வழிக் கற்றல் வேண்டாமென எதிர்க்கும் ஆசிரியர் சங்கங்கள் சுட்டும் முதல் காரணம் இதுதான். இன்று தமிழக ஆரம்பப் பள்ளிகள் அனைத்தும் ஈராசிரியர் பள்ளிகள்ளே. ஐந்து வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்கள்; பல நாட்கள் பல காரணங்களால் பெரும்பாலும் ஓராசிரியரே அனைத்து வகுப்புகளையும் நடத்துவார். கட்டணம் வசூலிக்கும் எந்தப் பள்ளியாவது ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியரின்றி நடைபெற இயலுமா? கதியற்ற ஏழைக் குழந்தைகளுக்குத்தான் இந்நிலை. செயல்வழிக் கற்றல் பற்றி ஒரு தவறான கருத்து நிலவுகிறது. பல வகுப்பு மாணவர் ஒன்றாகக் கற்கும் Multigrade System ஆனதால், ஒரு ஆசிரியரே போதுமானது என்பது பொய்யான வாதம்; அரசு தன் பொறுப்பை உதறும் கண்டனத்திற்குரிய போக்கு. செயல்வழிக் கல்வியில் ஆசிரியருக்கு ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் அவளது பலம்-பலவீனங்கள் குறித்தும் சரியான கணிப்பு தேவை. ஆகவே இத்திட்டத்திற்குத் தேவைப்படுவது முன்னைவிட அதிக ஆசிரியரேயன்றிக் குறைவாக அல்ல. செயல்வழிக் கற்றல் கல்வி நடைபெறும் ரிஷி பள்ளத்தாக்கு முதலான பள்ளிகள் எதிலுமே 30 மாணவருக்கு ஓராசிரியர் என்ற விகிதம் மீறப்படுவதில்லை. ஆகவே எங்கள் குழுவின் மிக அழுத்தமான பரிந்துரை இத்திட்டத்தின் முதல் தேவை வகுப்பிற்கு ஓராசிரியர், ஓர் ஆசிரியருக்கு 30 மாணவருக்கு மிகைப்படாத விகிதம்; பள்ளி நாட்கள் அனைத்திலும் ஆசிரியர் வகுப்பில்தான் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கண்காணிப்பு. கல்வி மறுக்கப்பட்ட குடும்பக் குழந்தைகளுக்கு இது ஆதாரத் தேவை என்பதையும் இன்று அமெரிக்காவில் கறுப்பு-லத்தீன் இனக் குழந்தைகள் கற்கும் பள்ளிகளில் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற கோரிக்கை எழுந்துள்ளதையும் அறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது.
அடுத்து, இத்திட்டம் குழந்தைகள் நான்காம் வகுப்பு முடிக்கும்போது குறிக்கப்பட்ட திறமைகளைப் பெறுவர் என்ற உத்திரவாதம் ஏதும் அளிக்கவில்லை. இம்முறையில் ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய சொந்த வேகத்திலேயே கற்க முடியும் என்றாலும், ஒரு ஆண்டிலோ அல்லது நான்கு ஆண்டுகள் முடியும்போதோ குறிப்பிட்ட கற்றல் அடைவுகளை அனைத்துக் குழந்தைகளும் அடையச்செய்ய வேண்டும். மூன்றாம், நான்காம் வகுப்புகளிலுள்ள குழந்தைகள் சுயமாகக் கற்கும் திறமைகளை அடைந்துவிட வேண்டுமென்று திட்டம் எதிர்பார்க்கிறது. நாங்கள் ஆய்வுசெய்த சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் இம்முறை நான்காண்டுகளாக நடைபெறுகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளின் திறமைகளைத் தேர்வுசெய்தோம். அதிர்ச்சியே காத்திருந்தது. மூன்று அல்லது நான்காம் வகுப்பு மாணவர்களில் பாதிக்குக் குறைவாகத்தான் ஒரு எளிய கதை வாசிக்கும் திறமை பெற்றவர்களே; 25 சதவீத மாணவர் வார்த்தைகள் வாசிப்பதைத் தாண்டி, அடுத்த படிக்கு முன்னேறவில்லை. கணிதத்திலும் இதே நிலைதான். தாழ்வுற்ற இந்தத் திறமை நிலைக்குச் செயல்வழிக் கற்றல்தான் காரணம் என்று சொல்லவில்லை. நிலைமை குறித்த baseline study, மாற்றத்திற்கு முந்தைய நிலை குறித்த ஆய்வு ஏதும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் செயல்வழிக் கற்றல், கற்றல் திறமை அடைவுகளில் முன்னேற்றம் எதையும் உண்டாக்கியிருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலை நீடிக்குமென்றால் சமுதாயத்தின் பெரும்பாலாரான பொதுப் பள்ளி மாணவருக்குப் பெரும் அநீதி இழைக்கப்படுகிறது என்றுதான் கூற வேண்டும். தமிழகத்தின் பள்ளிக்கல்வி பெருமளவு தனியார்மயமாக்கப்பட்டதின் விளைவாக அரசுப் பள்ளிகள் பெரும் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு அறிகுறி.
இதை ஒட்டி எழுந்திருக்கும் ஒரு விமர்சனத்தை இங்கே குறிப்பிட வேண்டும். செயல்வழிக் கற்றல் கல்வி அரசு-உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமே ஏன் நடைபெறுகிறது? மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை? வசதிபடைத்த குழந்தைகள் ஏன் இந்தத் திட்டத்திலிருந்து விடுபட்டுள்ளனர்? பெரும் பயனளிக்கும் சிறந்த திட்டமென்றால் அப்பள்ளிகள் இதனை அரசுப் பள்ளிகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தியிருப்பார்களே! இலவசப் பள்ளிகளில் மட்டுமே இத்திட்டம் என்பது ஏற்கெனவே இருவகைப் பள்ளிகளுக்கும் உள்ள இடைவெளியை இன்னும் அதிகரிக்குமோ? வசதியற்ற குழந்தைகள் போட்டிக் களத்தில் முன்னைவிட வலுவிழந்தவர்களாக ஓரங்கட்டி ஒதுக்கப்படும் நிலை ஏற்படுமோ! நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மேலும் மூர்க்கமடையச் செய்யுமோ? பல ஆசிரியர் சங்கங்கள் இத்திட்டம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் கொண்டுவரப்பட வேண்டுமென்று கோரிக்கைவைத்துள்ளனர். அதிலும், சமச்சீர் கல்வி குறித்துப் பேசிவரும் தமிழக அரசு முதல் கட்டமாகத் திட்டத்தை அனைவருக்கும் பொதுவானதாக ஆக்கட்டும்.
ஒவ்வொரு வகுப்பிலும் மெதுவாகக் கற்கும் குழந்தைகள், ஒரு கட்டத்தில் தேக்கமடைந்திருப்போர் கணிசமான எண்ணிக்கையிலுள்ளனர். இவர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமானது. அதிலும் பெரும்பாலான குழந்தைகள் வீடுகளில் உதவிபெற இயலாதவரானதால், மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்கும் பின்தங்கிய குழந்தைகளுக்கும் ஒரு கட்டத்தில் நீண்ட நாட்கள் தேங்கிவிடும் குழந்தைகளுக்கும் திருத்தச் செயல்பாடுகள் (Remedial Programme), கூடுதலாகச் சில வேறுபட்ட பயிற்சிகள் மூலம் அளிக்கப்பட வேண்டும். இதற்கான எந்த ஏற்பாடும் இப்பொழுது செய்யப்படவில்லை. திட்டத்தின் மிகப் பெரும் பலவீனம் இது. செயல்வழிக் கற்றல் திட்டத்தினுள்ளேயே திருத்தச் செயல்பாடுகள் இணைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவது சரியல்ல.
கவலைக்குரிய மற்றொரு அம்சம் ஆசிரியரின் சுதந்திரம் தன் வகுப்பறையை வடிவமைத்துக்கொள்ளும் உரிமை, புதிய போதனா முறைகளை மாணவருக்கு ஏற்றவண்ணம் உருவாக்கும் பெருமை இவற்றிற்கெல்லாம் இத்திட்டத்தில் இடமிருப்பதாகத் தெரியவில்லை. இக்குறைகளுக்கெல்லாம் செயல்வழிக் கற்றல்தான் காரணம் என்று சொல்ல இயலாது. இந்தியக் கல்வியின் இரு பெரும் சீர்கேடுகள், சர்வநாசினிகள் வணிகமயமான தனியார் கல்வியும், அதிகாரமய மாக்கப்பட்ட பொதுக் கல்வியும்தான் இரண்டாவதின் காரணமாக ஆசிரியர் ஒரு அதிகார அமைப்பின் கடைநிலை ஊழியராக மாற்றப்பட்டிருக்கிறார். தனது வகுப்பறையைத் தனக்கே உரிய பெருமைமிகு படைப்புக்களமாக ஆசிரியர் கருத வேண்டும்; அதற்குரிய சுதந்திரம் அவருக்கு அளிக்கப்பட வேண்டும். இந்தச் சுதந்திரத்தின் மறுபக்கம் ஆசிரியரின் கடப்பாடும், தன் மாணவருக்கான பொறுப்புணர்வும். ஆசிரியருக்கு இத்தகைய மதிப்பும் மரியாதையும் மறுக்கப்பட்டதன் விளைவு சமுதாயத்திலும் ஆசிரியருக்கு இருந்த ஏற்றம் இன்று மறைந்துவிட்டது. ஆசிரியருக்குத் தன் மாணவரின் பெற்றோருடனும் அவர் வழியே சுற்றிலுமுள்ள சமுதாயத்துடனும் இருக்க வேண்டிய உயிர் பந்தங்கள் அறுபட்டன; அல்லது உருவாகவே இல்லை.
செயல்வழிக் கற்றல் இந்த வேதனைமிகு போக்கினை இன்னும் தீவிரப்படுத்தி, அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாக ஆசிரியரை மாற்றியிருக்கிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் செயல்வழிக் கற்றல் ஒரு நுணுக்க நிர்வாக அமைப்பு (micro-managed system). இத்திட்டத்தின் ஒவ்வொரு ஏணியின் ஒவ்வொரு மைல்கல்லும் ஒவ்வொரு மைல்கல்லின் ஒவ்வொரு படியும் ஒவ்வொரு படியின் ஒவ்வொரு செயல்பாடும் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று இறுக்கமாக வரையறுக்கப்பட்டு வலியுறுத்தப்படுகிறது. கற்பித்தலின் ஜீவனையே இது கொன்றுவிடுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. கண்காணிப்பு அமைப்பின் ஒவ்வொரு மட்டத்து அதிகாரியும் குறிப்பிட்ட செயல்பாடுகள் முடிக்கப்பட வேண்டுமென்பதையே இலக்காக வலியுறுத்துவதாகத் தோன்றுகிறது.
இத்தகு அதிகார அமைப்பின் காரணமாக ஆசிரியர் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் குறித்துப் பேசவே அஞ்சுகிறார்கள். நாங்கள் சென்ற பள்ளிகளில் எந்தப் பிரச்சினை குறித்துப் பேசுவதற்கும் ஆசிரியர் அஞ்சியதை நன்கு உணர முடிந்தது. பள்ளியில் பல மணி நேரம் செலவழித்த பின், மீண்டும் மீண்டும் நாங்கள் வலியுறுத்திக் கேட்டு, விமர்சித்த ஆசிரியர் பெயரோ பள்ளியின் பெயரோ வெளியில் சொல்லப்படாது என்ற உத்திரவாதத்தைப் பலமுறை அளித்த பிறகே வாய் திறந்து குறைகூறத் தொடங்கினர். வேறு பணிக்காக மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பல ஆசிரியரை ஒருமுறை சந்திக்க நேர்ந்தபோது, எடுத்துக் கொண்ட பொருளையே விட்டுவிட்டு, இரண்டு மணி நேரம் செயல்வழிக் கற்றல் குறித்த ஆதங்கங்களை ஆசிரியர் கொட்டுவதைக் கேட்க நேர்ந்தது. உங்களது கவலைகளையும் ஆலோசனைகளையும் தலைமை அதிகாரிகளுக்குத் தெரிவித்தீர்களா என்று கேட்டதற்குக் கிடைத்த பதில்: "கூட்டங்களில் எங்களை வாய் திறக்க அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. செயல்வழிக் கற்றல் குறித்துப் புகழ வேண்டுமென்றால் பேசுங்கள்; இல்லா விட்டால் சும்மா இருங்கள்" என்று அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறினர். இத்தகைய ஆதங்கங்களைக் கடந்த சில மாதங்களில் பலமுறை கேட்டிருக்கிறோம். இந்நிலைக்கு ஆசிரியரும் கல்வியும் தள்ளப்பட்டிருக்கும் அவலம் குறித்து விமர்சிக்கத் தேவையில்லையென்று நினைக்கிறேன்.
திட்டத்தின் வடிவமைப்பில் பல குறைகள் உள்ளன. இவை அனைத்தும் ஆசிரியருடன் கலந்து ஆலோசித்துத் திருத்திக்கொள்ளக்கூடிய குறைகள்தாம். அவற்றில் ஒரு சில:
செயல்வழிக் கற்றல் ஏணி என்பது இம்முறையின் மிக முக்கிய வடிவமைப்பு. சொல்லப்போனால் ஏணிப்படியின் சர்வாதிகாரம் இன்று வகுப்பறைகளில் கோலோச்சுகிறது. ஆனால் ஏணி-திறன் சமன்பாடு தெளிவாகப் புலப்படவில்லை. ஏணியின் எந்தப் படியை முடித்தால் குழந்தை எந்தத் திறமை அடையும் என்று சொல்ல இயலவில்லை. ஏணியின் ஒரு கட்டம் குழந்தை கற்றுக்கொண்ட ஒரு திறமையைக் குறிக்கிறதா அல்லது குறிப்பிட்ட சில செயல்பாடுகளைக் குறிக்கின்றதா என்பதும் தெளிவாக இல்லை. ஏணிப்படி முறை மிகவும் சிக்கலானது; அதனைக் குழந்தைகள் புரிந்துகொள்ள மூன்று மாத காலமாயிற்று என ஆசிரியர்கள் கூறினர். விலை மதிப்பற்ற மூன்று மாதங்களை இதற்குச் செலவிட வேண்டுமா? ஏணியின் படிகள் குறைக்கப்பட வேண்டும் அல்லது சீரமைக்கப்பட வேண்டும்.
பாடப் புத்தகத்திற்குப் பதில் படங்களும் சொற்களும்கொண்ட வண்ண அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை மாணவர் தாமாகக் கற்கும் உபகரணங்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பாடப் புத்தகம் அப்படியே அட்டைகளாக மாற்றப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் சொல்கின்றனர். அட்டைகளை உருவாக்க வேறு அணுகுமுறை பயன்படுத்தப்பட வேண்டும். அத்துடன் பாடப் புத்தகங்களும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. பெரும் குழப்பம் நிலவுகின்றது. பயன்படுத்தும் உபகரணங்கள் dynamic materialஆக இல்லை; static materialஆக இருக்கின்றன. இதனால், அட்டைகளைப் பல வகைகளில் பயன்படுத்திக் கிடைக்கக்கூடிய நன்மையை இழக்க நேரிடுகிறது.
குழந்தைகள் குழுக்களாகப் பிரிந்து, வட்டமாக அமர்ந்து கற்பது இத்திட்டத்தின் புதுமைகளில் ஒன்று. குழுவழிக் கற்றலில் குழந்தைகள் குழுக்களில் இணைந்து, பகிர்ந்து, விளையாட்டுகள் போன்றவை மூலம் கற்பது அவர்கள் ஆர்வத்துடன் எளிதாகக் கற்க ஏதுவாகிறது. ஆனால் இன்றைய செயல்வழிக் கற்றலில் குழந்தைகள் வட்டமாக உட்கார்ந்து, ஆனால் அவரவர் தனித்தனியாகத் தங்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனரே அன்றி இணைந்து கற்பதில்லை. இதுவல்ல குழுவழிக் கற்றல்.
சக மாணவரிடமிருந்து கற்றல் ஆசிரியரிடமிருந்து கற்பதைக் காட்டிலும், குழந்தைகள் ஆர்வமுடன், அச்சமின்றிக் கற்க உதவுவதாகச் சொல்லப்படுகிறது. விரைவில் கற்கும் குழந்தைகள் மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்குக் கற்றுத்தரல் வேண்டும். இதன் மூலம் ஆசிரியரின் சுமையும் குறையுமென்று சொல்லப்படுகிறது. ஆனால் இவ்வகுப்புகளில் அத்தகைய கற்றல் நடைபெறுவதாகத் தோன்றவில்லை. முன்னேறிய குழந்தைகள் பின்தங்கியோருக்குக் கற்றுத்தரும் திறமையும் பொறுமையும் கொண்டவரல்ல.
இவை போன்ற திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஏராளமான குறைகளும் குழப்பங்களும் உள்ளன. ஒரு பிரம்மாண்ட திட்டத்தை நிறைவேற்றுவதில் தொடக்கக் காலத்தில் எதிர்பார்க்கக் கூடிய பிரச்சினைகள்தாம் இவை. விவரங்களில் சைத்தான் ஒளிந்துகொண்டிருக்கிறது (Devil is in the detail) என்று சொல்வார்கள். நுணுக்கங்களில் கவனம் செலுத்தாவிட்டால் திட்டமே நொறுங்கிவிடும்.
இன்று திட்டத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பல குரல்கள் எழுந்துள்ளன. ஒரு ஆரோக்கியமான விவாதம் தேவை. பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் செயல்வழிக் கல்வியைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டாலும், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற அதன் அடிப்படைத் தேவைகளைத் தீர்க்காமல் திட்டத்தைத் தொடரக் கூடாது என்கின்றன. சங்கங்கள் பொத்தாம் பொதுவாக எதிர்க்காமல் திட்டத்தின் அடிப்படைகளையும் நுணுக்கங்களையும் குறித்து, அறிவுபூர்வமாக, அனுபவபூர்வமாகப் பரந்த ஆய்வும் விவாதமும் நடத்தி, தங்கள் ஆலோசனைகளை ஏற்க அரசை வற்புறுத்த வேண்டும்.
திறந்த மனத்துடன், விமர்சனங்களை ஏற்று, தேவையான மாற்றங்களைச் செய்யும் மனப்போக்கும் முதிர்ச்சியும் கல்வித் துறைக்குத் தேவை. மேலிருந்து திணிக்கும் திட்டங்கள் வெற்றிபெற வாய்ப்பில்லை. அனைத்து வகைப்பட்ட பள்ளிகளிலும் இத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். பெரும் ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த அமைப்பில், வசதியற்ற குழந்தைகளைக் கொடுமையான புறக்கணிப்புக்கு உள்ளாக்கியிருக்கும் அமைப்பில், இதன் மூலம் இடைவெளிகள் இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் தவிர்க்கப்பட வேண்டும். நீண்ட காலமாகக் கல்வி அமைப்பைச் சீரழித்துக்கொண்டிருக்கும் பல்வகைப் பள்ளிகள், ஆசிரியர் பற்றாக்குறை, சமுதாயப் பங்கேற்பின்மை போன்ற பிரச்சினைகளைத் தொடாமல் போதனாமுறை மாற்றத்தினால் மட்டும் முன்னேற்றம் காண இயலாது.
அனைத்திற்கும் மேலாக போதனாமுறையும் வகுப்பறைக் கலாச்சாரமும் ஆசிரியரின் சுதந்திரத்தில், திறமையில், படைப்பாற்றலில், அனுபவ முதிர்ச்சியில், பொறுப்புணர்வில் வேர் கொண்டவை. இவை அனைத்தும் மதிக்கப்படும் சூழலில் ஆசிரியர் தம் வகுப்பறை தமக்கே உரியதெனச் சொந்தம் கொண்டாடித் தனது மாணவரின் திறமையில் தன் வாழ்வின் அர்த்தத்தைக் காண்பார். அந்தச் சூழலை உருவாக்கக் கல்வித் துறை முயல வேண்டும்.
இவை அனைத்தும் மேற்கொள்ளப்பட்டால், தமிழ் நாட்டின் அனைத்துக் குழந்தைகளும் ஆர்வத்துடன் கற்று, கற்றல் திறன்களை அடைவார்கள். அனைத்துப் பயனாளிகளும் பங்கும் பொறுப்பும் ஏற்கும் அற்புதமான மாற்றம் உருவாகும் என்று நம்பலாம்.
n
குறிப்பு: 2008 சனவரியில் தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசுவும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் அன்றைய இயக்குநரும் இந்தக் கட்டுரையாளரைக் கேட்டுக்கொண்டதற்கு இணங்கச் செயல்வழிக் கற்றல் குறித்த ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. கட்டுரையாளருடன், கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ். இராஜகோபாலன், அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஆர். ஜெயகுமார் ஆகியோர் இணைந்த குழு, சர்வ சிக்ஷா அபியான் இயக்குநர் பரிந்துரைத்த சென்னை மாநகரப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசிடம் மார்ச்சு மாதம் ஓர் அறிக்கை அளிக்கப்பட்டது. ஐந்து மாதங்கள் கழிந்த பின்னும் அறிக்கை வெளியிடப்படாததால், 'கல்வி' என்ற அமைப்பின் மூலம் ஆகஸ்ட் 31ஆம் நாள் அது வெளியிடப்பட்டது.