நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Wednesday, October 17, 2012

இணையத்தில் படித்ததில் மிகவும் ரசித்தது...

1.பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

(இணையத்தில் படித்ததில் மிகவும் ரசித்தது..)





thanks Udai...

Wednesday, July 18, 2012

அதிசயம் ஆனால் உண்மை.......



தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான,ஆச்சர்யமளிக்கும்,அபூர்வமான நிகழ்வுகள் சில !!

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1. ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2. இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3.இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4. இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5. இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6.ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7.இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8. இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9. பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10.லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.


இது என் முகநூலில் வந்த ஒரு செய்தி ....

Saturday, July 14, 2012

கோவையிலிருந்து நாசாவிற்கு..




நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்த விண்வெளி ஆய்வு தொடர்பான கட்டுரைப் போட்டியில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ‘நாசா’ சென்று திரும்பியிருக்கிறார் கோவை மாணவர் ரோகன் கணபதி.

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் பி.இ. ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்கில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ரோகன், தமது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“எனக்கு சொந்த ஊர் உதகை. எங்கப்பா, ஏரோஸ்பேஸ் டெவலப்மெண்ட் அதாரிட்டியில வேலை பார்த்தாங்க. ஹார்ட் அட்டாக்குல திடீர்னு இறந்துட்டாங்க. அப்பா என்னோட இருக்கும்போது இரவு நேரங்கள்ல சொல்லும்விஞ்ஞானத் தகவல்கள், விண்வெளி சம்பந்தப்பட்ட செய்திகள், விண்வெளி ஆராய்ச்சிகள்போன்றவைதான் விண்வெளி மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திச்சு. எங்கப்பாவோட நண்பர் ஜெர்மனியில சயின்டிஸ்ட்டாக இருக்கிறார். அவர் மூலமாகத்தான் நாசா அறிவிச்சிருந்த போட்டி பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். ‘விண்வெளி ஆழ்பகுதி’ங்கிற தலைப்பில ஜுபிடர் கோளில் இருக்கிற நிலா பத்தி 9 பக்கத்துல ஆராய்ச்சிக்கட்டுரை எழுதி அனுப்பினேன். உலகம் முழுவதிலுமிருந்து 2 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டு, அதுல 87 ஆய்வுக் கட்டுரைகள் ஏற்கப்பட்டுச்சு. இதுல இந்தியாவிலேருந்து நான் அனுப்பின ஆய்வுக் கட்டுரை மட்டுமே தேர்வாச்சு” என்கிற ரோகனின் பேச்சு, தனது ஆராய்ச்சி பற்றித் திரும்பியது.

“சோலார் கிரகங்களில் இருக்கிற ஜுபிடரில் 32 நிலாக்கள் இருக்குது. இதுல ‘யூரோப்பா’ங்கிற நிலா பெரிசு. இங்க சுத்தமான தண்ணீர் இருக்குது. வான்வெளியில வேறு எந்தக் கோள்களிலும் இதுபோன்ற நல்ல தண்ணீர் கிடையாது. தண்ணீர் இருந்தால், உயிரினங்கள், தாவர இனங்கள் வாழ முடியும். இது 3,500 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. பூமியில இருந்து 170 கோடி கி.மீ. தூரத்துல அமைஞ்சிருக்குது. மண், கல், பாறை கிடையாது. 10 கி.மீ. ஆழத்துக்கு பனிக்கட்டி உறைஞ்சு கிடக்குது. அதுக்குக் கீழே நல்ல தண்ணீர் இருக்குது. இந்தத் தண்ணீரை எப்படி எடுக்கறதுங்கிறது பற்றி யாரும் இதுவரைக்கும் ஆராய்ச்சி செய்யல. நான் ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சு இன்னமும் செயல் வடிவம் பெறாத Crybot, Hybrobot -ங்கிற ரெண்டு ரோபோக்கள் மூலமாக அங்க இருக்ககிற ஐஸ் கட்டிகளை மெல்ட் பண்ணி தண்ணீர் கொண்டு வர முடியும். அங்கிருக்கிற தகவல்களையும் சேகரிக்கலாம். ஆனா, இத ‘யூரோப்பா’ நிலவுக்கு அனுப்பறதுக்கு நாம ஏவுகிற சாதாரண ராக்கெட் போதாது. அது பூமியோட விண்வெளி வரைக்கும் மட்டும்தான் போகும். அங்க இருந்து ‘யூரோப்பா’ போகணும். அதுக்கு விண்வெளில போகுற மாதிரி ராக்கெட் தேவை. Mangneto Plasma Dynamic Thruster -ங்கிற விண்வெளி ராக்கெட் உருவாக்க முயற்சி செய்துட்டு இருக்கேன். இதை முதன்முதலா தயாரிக்க ரூ.5.5 லட்சம் ஆகும். இதுக்கு செயல் வடிவம் கொடுத்து சந்தைக்கு வரும்போது வெறும் ஐம்பதாயிரம்தான் ஆகும். இந்த ராக்கெட் தயாரிக்க எனக்கு யாராவது உதவினா நல்லா இருக்கும்” என்கிற ரோகன், தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஏகப்பட்ட கனவுகள் வைத்திருக்கிறார்.

நானோ சாட்டிலைட் தயாரித்து நாட்டிலுள்ள அனைத்துக் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து, விண்வெளி தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவேண்டும். ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கவேண்டும் என்பதே இவரது கனவு. கனவுகள் மெய்ப்படட்டும்!

என். ஹரிபிரசாத் (பத்திரிக்கையாளர்)


மதுரைக்கு அருகே ஆராச்சி மையம்..!!!!

வான்வெளியிலிருந்து பாயும் நியூட்ரினோக்கள்.. 'பிடிக்க' மதுரைக்கு அருகே ஆராச்சி மையம்..!!!!

மதுரை அருகே தேனியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது.
கதிர்வீச்சு கொண்ட தனிமங்கள் சிதையும் போதோ அல்லது அணு இணைவு, அணு சிதைவின் போதோ, கதிர்வீச்சுக்கள் பட்டு அணுக்கள் சிதையும் போதோ உருவாகும் இயற்கையான துணை அணுத் துகள் தான் நியூட்ரினோ. பெரும்பாலும் சூரியனில் நிகழும் அணு இணைவின்போது (nuclear fusion) இது உருவாகிறது.
ஒளியின் வேகத்தில் பயணிக்கும் இந்தத் துகள் கிட்டத்தட்ட எடையே இல்லாதது. இதை கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது. சூரியனிலிருந்தும் விண்மீன்களில் இருந்தும் கிளம்பும் இந்த நியூட்ரினோக்கள் அண்டவெளியில் படுவேகத்தில் பயணித்து, பூமியிலும் தங்கு தடையின்றி உலா வருகின்றன. சராசரியாக ஒரு மனிதனி்ன் உடலில் ஒரு வினாடிக்கு 50 டிரில்லியன் நியூட்ரினோக்கள் நுழைந்து வெளியேறுகின்றன.

இந்தத் துகளை ஆய்வு செய்தால் சூரியன், விண்மீன்கள் உள்பட விண்வெளியின் பல ரகசியங்களுக்கு விடை காண முடியும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக ஒரு விண்மீன் இறக்கும்போது, முதலில் அது உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். அப்போது அதன் மையப் பகுதி பல லட்சம் மடங்கு விரிவடையும். அந்த நேரத்தில் நட்சத்திரத்தின் மையப் பகுதியில் அளவிட முடியாத அளவுக்கு மாபெரும் அழுத்தம் உருவாகும். அந்த அழுத்தத்தில் இருந்து எந்த ஒரு பொருளும், ஒரு அணு கூட வெளியே 'எஸ்கேப்' ஆக முடியாது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு மரணிக்கும் நட்சத்திரத்திலிருந்து கூட தப்பி வரும் ஒரே துணை அணுத் துகள் நியூட்ரினோ மட்டும்.

எனவே, நியூட்ரினோவைப் பற்றி கொஞ்சம் நன்றாக ஆராய்ந்தால் பல்வேறு ரகசியங்களுக்கு, நட்சத்திரம் ஏன் இறக்கிறது என்பதில் ஆரம்பித்து, விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆனால், இந்த நியூட்ரினோக்களை 'பிடிப்பது' அவ்வளவு எளிதல்ல, மிக மிகக் கடினம். எந்தப் பொருளோடும் 'ரியாக்ட்' செய்யாத தன்மை கொண்ட நியூட்ரினோக்களை பரிசுத்தமான நீரில் தான் 'பிடிக்க' முடியும் என்பதால் அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதே போல ஜப்பானில் ஒரு மாபெரும் அண்டர்கிரவுண்ட் ஆராய்ச்சி மையம் (Super K) உள்ளது. ஹிடா நகரில் உள்ள இந்த ஆராய்ச்சி மையம் தரைக்கு அடியில் 1000 மீட்டருக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள 41.4 மீட்டர் உயரம், 39.3 விட்டம் கொண்ட மாபெரும் தொட்டிகளில் மிகவும் தூய்மைப்படுத்தப்பட்ட நீர் தான் நியூட்ரினோக்களை பிடிக்க உதவும் கருவியாகும். ஆனால், இவ்வளவு பெரிய இந்த தொட்டியில் சிக்குவது ஆண்டுக்கு சில நியூட்ரினோ துகள்களே.

இந் நிலையில் இப்போது இந்த ஆராய்ச்சியில் இந்தியாவும் இறங்கியுள்ளது. முதலில் நீலகிரி மலைப் பகுதியில் இதற்கான ஆய்வகத்தை அமைக்க திட்டமிடப்பட்டது. அங்கு மழைப் பொழிவு அதிகம் என்பதால் மதுரைக்கு அருகே தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில் அம்பரப்பர் கோவில் கரடு பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மிகப் பழமையான கற்பாறைகள் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் இந்த ஆய்வுக் கூடம் அமைக்க மிக ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏற்றதாக உள்ளது. எனவே இப்பகுதியை, நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.

பாபா அணு சக்தி ஆராய்ச்சி மையமும், மும்பை Tata Institute of Fundamental Research (TIFR), Saha Institute of Nuclear Physics (SINP), கொல்கத்தா Variable Energy Cyclotron Centre (VECC), சென்னை ஐஐடி இயற்பியல் பிரிவு உள்பட ஏகப்பட்ட அமைப்புகள் இணைந்து இந்த ஆய்வு மையத்தை அமைக்கவுள்ளன.

சுமார் ரூ. 1,250 கோடி செலவில் இந்த ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. இப்போதைக்கு இதற்கு India-based Neutrino Observatory என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளை ஒருங்கிணைக்க National Centre for High Energy Physics என்ற ஒரு இயற்பியல் ஆராய்ச்சிப் பிரிவும் மதுரையில் அமைக்கப்படவுள்ளது. (இங்கு வேலை செய்ய ஆட்களைக் கூட எடுத்து வருகிறார்கள்.. பார்க்க http://www.ino.tifr.res.in/ino//career.php).

கிட்டத்தட்ட 4,300 அடிக்கு ஆழத்தில் மாபெரும் சுரங்கம் அமைத்து அதில் 50,000 டன் எடை கொண்ட மாபெரும் காந்தங்களை பொறுத்தவுள்ளனர். இவை ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்க ஜெனீவாவில் உள்ள CERN சுரங்க ஆராய்ச்சி மையத்தில் பொறுத்தப்பட்ட காந்தங்களை விட 4 மடங்கு அதிக சக்தியும், எடையும் கொண்டவை.

மேலும் தேனியில் அமையும் இந்த சுரங்கத்துக்குள் பொறுத்த 50,000 டன் இரும்பு பிளேட்களும் (soft iron plates) தேவைப்படும். இவற்றை மத்திய அரசின் Steel Authority of India எஃகு நிறுவனத்தின் பிலாய் தொழிற்சாலை தயாரித்து வழங்கவுள்ளது.
இந்த 50,000 டன் காந்தங்களைக் கொண்டு magnetized iron calorimeter (MIC) என்ற கருவியை உருவாக்கி நியூட்ரினோக்களைப் பிடித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காந்தங்கள் தான் உலகிலேயே மிகப் பெரிய காந்தங்களாக இருக்கும் என்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஜெனீவாவில் நடந்த 'ஹிக்ஸ் போஸான்' மாதிரியான ஒரு மாபெரும் ஆராய்ச்சி நம்ம 'மதுரக்கி பக்கத்துல' நடக்கவிருக்கிறது!


பட்டினி நாடுகளை வாழவைக்க இந்தப் பணத்தைச் செலவிடலாமே?

 


இந்த கடவுளின் துகளை கண்டறியும் முயற்சி ஆரம்பித்தது 1983ம் ஆண்டு.பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு இதன் ஆய்வக தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

இப்போதுதான் அந்த சோதனை மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியிருக்கிறது. ஆனாலும் முழுமையான சோதனை முடிய இன்னும் நான்கைந்து ஆண்டுகள் ஆகலாம்.

இதையடுத்து வேறோரு கோணத்தில் ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டே போகும் என்பது நிச்சயம்.

இந்த சோதனை நடந்தால் உலகமே அழியும் என ஒரு குரூப் தீவிரமாக இந்த சோதனைக்கு எதிராக நின்றனர். அளவிட முடியாத அணுவின் ஆற்றல் இந்த மோதலில் விளைவாய் ஏற்படும்

இதன் மூலம் உலகம் அழியும் என சிலரும், உலகம் இந்த சோதனையினால் சுருங்கி சிதறும் என ஒரு செட்டப் குரூப்பும் தங்கள் தரப்பு விளக்கங்களோடு எதிர்க்கின்றனர்.

இன்னும் ஒரு சிலர் பூமியிலுள்ள உயிர்வழி எல்லாம் இந்த சோதனையின் மூலம் இழுக்கப்பட்டு பூமி வெற்றிடமாகிவிடும்.

இந்த பூமி எனும் கோளமே இந்தச் சோதனையின் மூலம் முழுமையாக அழிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

டாக்டர். அட்ரியன் கெண்ட் என்பவர் இந்த சோதனையின் விளைவுகள் கவனமாய் பரிசீலிக்கப்படவில்லை எனவும் ஒட்டு மொத்த மனித குலத்தில் சாவுமணியாய் இருக்கக் கூடும் இந்த அராய்ச்சி என 2003 ல் ஒரு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத் தக்கது.

எனினும், இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளவர்களோ, இதில் உலகிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தொடர்ந்து சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சிக்காக அவர்கள் செய்திருக்கும் ஏற்பாட்டைப் பார்த்தால் வியப்பில் புருவங்கள் எகிறிம்.

பிரான்சு – சுவிட்சர்லாந்து எல்லைப் பகுதியில்தான் இந்த சோதனைத் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. தரையில் பூமிக்குக் கீழே சுமார் நூறு மீட்டர் ஆழத்தில் தான் இந்த சோதனைச் சாலையே அமைகிறது.

உள்ளே மிக சக்தி வாய்ந்த ஒரு சுற்றுப் பாதையை அமைக்கிறார்கள். இந்தச் சுற்றுப் பாதையின் நீளம் 27 கிலோ மீட்டர்கள்!


இந்தச் சுற்றுப் பாதை மிக மிக சக்தி வாய்ந்த, கனம் வாய்ந்த, வலிமை வாய்ந்த உலோகங்களால் அமைக்கப்படுகிறது. அணுக்களின் மோதல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே துல்லியமாய் ஊகிப்பது கடினம் என்பதால் அதீத கவனம் எடுத்துக் கொள்வதாகத் தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த 27 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் சுமார் 5000 காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவையே இந்த ஒளிக்கற்றையை சரியான பாதையில் பயணிக்க வைக்கும்.

இந்த ஒட்டு மொத்த அமைப்பும் சுமார் -271 டிகிரி செண்டிகிரேடில் உறை குளிர் நிலையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக குளிரான இடம் இது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அதற்காக அவர்கள் திரவ ஹீலியத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது ஒரு இன்னோரு அறிவியல் தகவல்.

இந்த அமைப்பை இந்த நிலைக்குக் குளிர வைக்கவே சுமார் ஒரு மாத காலம் ஆகுமாம்.

இந்த அமைப்பிலுள்ள காம்பாக்ட் மோன் சோலினாய்ட் ( Compact Muon Solenoid (CMS) ), எனும் ஒரு சிறு பகுதியின் எடை மட்டுமே சுமார் 2500 டன் என்றால் மொத்த அமைப்பின் எடையை சற்று யோசித்துப் பாருங்கள். இதை பூமியில் நூறு அடி ஆழத்தில் இறக்கி வைக்க ஆன நேரமே 12 மணி நேரம் எனில் மொத்த அமைப்பின் தயாரிப்புக் காலத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

சரி, இதை வைத்துக் கொண்டு எப்படித் தான் ஆராய்ச்சி செய்கிறார்கள்.

எளிய முறையில் சொல்ல வேண்டுமெனில், இந்த வட்டப்பாதையில் ஒரு முனையிலிருந்து இரண்டு புரோட்டான் ஒளிக்கதிர்களை பாய்ச்சுவார்கள். இதன் சக்தி 450 கிகா எலக்டோ வால்ட். இது சுற்றுப் பாதையில் இரண்டு பக்கமுமாகப் பாய்ந்து செல்லும். இந்த பாய்ச்சலை சுற்றியிருக்கும் காந்தங்கள் வகைப்படுத்தும்.

வட்டத்தில் இரண்டு பாதை வழியாக வேகமாக வரும் இந்த கதிர்கள் ஒரு இடத்தில் மோதிச் சிதறும். அந்த மோதிச் சிதறும் கணத்தில் இந்த கடவுளின் துகள் என்று அவர்கள் அழைக்கும் சக்தி வெளிப்படும் என்பதே அவர்களுடைய கணிப்பு.
(க்ணிப்பு வ்பலித்து விட்டதே)

எவ்வளவு சக்தி வந்தாலும் இந்த அமைப்பு தாங்குமா என்பதை பல்வேறு கடினமாக சோதனைகள் மூலம் சோதித்து வந்தன்ர்.

பன்னிரண்டாயிரம் ஆம்ப்ஸ் மின்சாரத்தை இவற்றில் பாய்ச்சி சோதிப்பது அவற்றில் ஒன்று.

இந்தச் சோதனை குறித்த விரிவான தகவல்கள் பெற விரும்பினால் http://lhc.web.cern.ch/lhc/ எனும் இணைய தளத்தை நாடலாம்.

பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் நிகழவிருக்கும் இந்த ஆய்வு விஞ்ஞானத்தில் இன்னும் பல மர்மக் கதவுகளை திறக்கப் படவில்லை.

இந்த ஆய்வு மனுக்குலத்தையே அழிக்கும் பல்வேறு மூலக்கூறுகளை உருவாக்கலாம், அல்லது இயற்கை கட்டமைப்பின் மாற்றங்களை உருவாக்கலாம், பூமியே உயிரற்ற ஒரு பொட்டல் காடாய் மாறிவிடலாம் எனும் அச்சம் வேறு பல ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.

இப்படிப்பட்ட சோதனைகளுக்காக பல ஆயிரம் கோடி செலவிடுவதை விட அக்கம் பக்கம் வறுமையினால் உயிரை இழந்து கொண்டிருக்கும் பட்டினி நாடுகளை வாழவைக்க இந்தப் பணத்தைச் செலவிடலாமே என்றும், உயிரின் முதல் துகளைத் தேடும் பணிக்காகச் செலவிடும் பணத்தில் உயிரின் கடைசித் துளியையும் இழந்து கொண்டிருப்பவனைக் காப்பாற்றலாமே என்றும் பல்வேறு எண்ணங்கள் மனித நேயம் கொண்ட உங்களிடம் இயல்பாகவே எழுகிறது தானே ?”

Wednesday, July 11, 2012

கள்ள நோட்டுகளை கண்டுபிடிக்க உதவியாக புதிய இணையதளம்


www.paisaboltahai.rbi.org.in.

கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டுபிடிக்க உதவும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை ரிசர்வ் வங்கி தொடங்கி இருக்கிறது.

கள்ள நோட்டுகளை எந்தெந்த முறையில் கண்டு பிடிக்கலாம் என்ற விவரம் அதில் உள்ளது. அந்த இணையதளத்தின் முகவரி www.paisaboltahai.rbi.org.in.
நன்றி -  Vikatan

Thursday, July 5, 2012

பழங்கால பழமொழிகள் இன்றும் நடை முறையில் !!!



அகத்தினழகு முகத்தில் தெரியும்.
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
அடியாத மாடு படியாது.
அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
 
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
எறும்பூரக் கல்லும் தேயும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
 
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
காகம் திட்டி மாடு சாகாது.
 
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
குரைக்கிற நாய் கடிக்காது.
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
 
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
தடியெடுத்தவன் தண்டக்காரன்.
தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
தன் வினை தன்னைச் சுடும்.
தனிமரம் தோப்பாகாது.
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
 
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
நிறைகுடம் தளும்பாது.
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
 
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
விளையும் பயிரை முளையிலே தெரியும்.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
 
பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
பூவிற்றகாசு மணக்குமா?
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
பேராசை பெருநட்டம்.
பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது

வேலிக்கு ஓணான் சாட்சி.

ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்

தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?