நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Sunday, June 3, 2012

அரசுப் பள்ளிகளில் சேர அதிக மாணவர்கள் ஆர்வம்

             தமிழக அரசு மேம்பாட்டு நடவடிக்கையால் அதை அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் ஏற்பட்டுள்ளது. அதனால் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு முதல் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள மாநகராட்சி அரசுப் பள்ளிகளிலும், புறநகர் பகுதியிலுள்ள பள்ளிகளிலும் எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மாணவர்களின் கோரிக்கை அதிகமாக உள்ளது. நேற்று பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே ஏராளமான புதிய மாணவர்கள் சேர்க்கைக்காக அலுவலகம் முன்பு குவிந்துகிடந்தனர்.

          குறிப்பாக 6-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள் மற்றும் 11-ம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகியுள்ளது. இது குறித்து கூடுவாஞ்சேரி ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது பிள்யைச் சேர்க்க வந்த ஜி.ஜெயந்தி கூறுகையில் நாங்கள் சாதாரண நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். சென்ற ஆண்டை விட தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு கட்டணங்களை கடுமையாக உயர்த்தி விட்டனர்.
எங்களுக்கு கல்வி தான் பெரிது. அதிக அளவில் கட்டணங்களை கட்ட முடியாததால் தனியார் ஆங்கிலப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த எங்கள் பிள்ளையை இந்த பள்ளியில் சேர்க்க வந்துள்ளேன் எனக் கூறினார்.
அதேபோல் பெருங்களத்தூர் அரசுப் பள்ளியில் தனது மகனை சேர்க்க வந்த ஜி.ஹரி கிருஷ்ணன் கூறுகையில், தற்போது அரசுப் பள்ளிகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. மேலும், கட்டணமும் இல்லை. சலுகைகளும் அதிகம். அதனால் தான் எனது மகளை அரசுப் பள்ளியிலேயே சேர்க்க முடிவெடுத்தேன் என்றார்.

          தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளிலிருக்கும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை விட பீர்க்கங்கரணைப் பள்ளியின் தேர்ச்சி விகிதம் மிகவும் அதிகம். அங்கு பன்னிரெண்டாம் வகுப்பு படித்த 235 மாணவர்களில் 231 பேர் தேர்ச்சி பெற்று அப்பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.மேலும், தனியார் பள்ளிகளை விட அடிப்படை மேம்பாட்டு வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைப்பதால் எங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியிலேயே சேர்க்க முடிவெடுத்து விட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
வண்டலூரைச் சேர்ந்த சுந்தர் கூறுகையில், என்.2 பிள்ளைகளையும் இங்குள்ள அரசுப் பள்ளியில் சேர்த்து விட்டேன். இதற்கு முன் ஆங்கிலப் பள்ளிகளில் படித்து வந்தனர். ஏராளமாக கல்வி செலவு ஆவதால் என்னால் சமாளிக்க முடியவில்லை. எனவே, இந்த முடிவு எடுத்து விட்டதாகக் கூறினார்.
எப்போது மில்லாத வகையில் இந்த ஆண்டு கேளம்பாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க அதிக அளவில் பெற்றோர் வந்திருந்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், இப்பள்ளியில் ஆங்கில வழியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்க வசதியுள்ளது. கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 மட்டுமே.
எனவே எங்கள் குழந்தைகளை இங்கே கொண்டு வந்து சேர்க்க வந்துள்ளதாகக் கூறினார்.

செய்தி : தினபூமி 

0 கருத்துரைகள்:

Post a Comment