நான் படித்ததும்... படைத்ததும்...உங்களுக்காக...

Thursday, March 22, 2012

இலக்கண வகை

1: எழுத்திலக்கணம்

1. முதல் எழுத்து:

உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும் (அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள), மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் (க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்.வ்,ள்,ழ்,ற்,ன்) பிற எழுத்துக்கள் உருவாகக் காரணமாக இருப்பதால் இவை முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன. இவற்றில் வல்லினம், மெல்லினம், இடையினம் பற்றி விரிவாக பின்பு காணலாம்.

உயிர் எழுத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை
உயிர் குறில் - அ,இ,உ,எ,ஒ - 5
உயிர் நெடில் - ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஒள - 7

மெய்யெழுத்துக்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அவை
வல்லினம் - க்,ச்,ட்,த்,ப்,ற்
மெல்லினம் - ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
இடையினம் - ய்,ர்,ல்.வ்,ழ்,ள்

2. சார்பெழுத்து - சார்பெழுத்து பகுதி 1

இப்பகுதியில் சார்பெழுத்துக்களில் முதல் இரண்டான உயிர் மெய்யெழுத்தையும்,ஆய்த எழுத்தை குறித்தும் இங்கு காணலாம்.

(அ) உயிர் மெய்யெழுத்து
க்+அ=க
க்+ஆ=கா
க்+ஈ=கீ

மேலே உள்ள எடுத்துக்காட்டில் "க்: எனும் மெய்யெழுத்தும் "அ" எனும் உயிரெழுத்தும் இணைந்து "க" என்னும் உயிர் மெய்யெழுத்து பிறக்கிறது.உயிரும் மெய்யும் சேர்ந்து ஒலிப்பதால் உயிர் மெய்யெழுத்தாகிறது.

இவ்வெழுத்து பிறப்பதற்கு மூலமாக உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் இருப்பதினால் இது சார்பெழுத்தாகிறது. மெய்யொலி முன்னும் உயிரொலி பின்னுமாகவும் இவ்வெழுத்துக்கள் ஒலிக்கப்படினும், உயிரின் மாத்திரை அளவே ஒலிக்கப்படுவதால் இவை மெய் உயிர் என வழங்கப்படாமல் உயிர்மெய் என வழங்கப்படுகிறது.இது இரு வகைப்படும். அவை

(1) உயிர்மெய்க் குறில்

மெய்யெழுத்துக்களோடு உயிர்க்குறில்கள் இணைந்து உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய்க் குறில் எனப்படுகின்றன. மொத்தம் (18 மெய் X 5 உயிர் குறில்கள்) 90 உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள்.

உதாரணம் க்+அ=க, க்+இ=கி, க்+உ=கு

(2) உயிர்மெய் நெடில்

மெய்யெழுத்துக்களோடு உயிர்நெடில்கள் இணைந்து உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் நெடில் எனப்படுகின்றன. மொத்தம் (18 மெய் X 7 உயிர் நெடில்கள்) 126 உயிர்மெய் நெடில் எழுத்துக்கள்.

உதாரணம்: க்+ஆ=கா

(ஆ) ஆய்த எழுத்து

"அஃது, எஃகு"

மெலே உள்ள சொற்களில் காணப்படும் மூன்று புள்ளிகளுடைய எழுத்தை நாம் ஆய்த எழுத்து என்கிறோம். 3 புள்ளிகளைப் பெற்றிருப்பதால் இது முப்பாற்புள்ளி, முப்புள்ளி எனவும் வழங்கப்படுகிறது. ஆய்த எழுத்து ஒரு வார்த்தையில் இடம் பெறும் போது தனக்கு முன் ஒரு குற்றெழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய்யெழுத்தையும் பெற்று நடுவில்தான் வரும். இவ்வாறு தனித்து வரும் ஆற்றல் இல்லாததினால் இது சார்பெழுத்தாயிற்று.

0 கருத்துரைகள்:

Post a Comment